பிஎஸ்சி, பிபார்ம், பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயம் – எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் பிஎஸ்சி, பிபார்ம், பிபிடி, டிப்ளமோ, அலைட்டு ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கு முதல்முறையாக கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்து சுயநிதி தொழிற்கல்லூரிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது. கட்டணம் 3 ஆண்டுகளுக்கு பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது.
சென்னை, ஜூலை 2 : தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் பிஎஸ்சி, பிபார்ம், பிபிடி, டிப்ளமோ, அலைட்டு ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கு முதல்முறையாக கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்து சுயநிதி தொழிற்கல்லூரிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கான பயிற்சி காலத்திற்கு கட்டணம் வசூல் செய்யக்கூடாது எனவும், நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணம் 3 ஆண்டுகளுக்கு பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது.
துணை மருத்துவப் படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயம்
அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்தால் அங்கீகாரத்தை ரத்து செய்ய பல்கலைக் கழகத்திற்கு பரிந்துரைச் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழத்தின் அங்கீகாரம் பெற்று இயங்கி வரும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த படிப்புகளுக்கு அரசு கல்லூரியில் அரசு நிர்ணயம் செய்த குறைந்தக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் கல்லூரிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயம் செய்து வசூல் செய்து வந்தனர். மேலும் கல்லூரிகளே மாணவர்களை சேர்க்கையும் நடத்தினர்.
இந்த நிலையில் சுயநிதி தொழிற்கல்லூரிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக்குழு தலைவர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் கல்லூரிகளில் இருந்து வரவு செலவு உள்ளிட்ட கணக்குகளை பெற்று ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் 2026-2027, 2027-2028, 2028-2029 ஆகிய 3 ஆண்டுகளுக்கு கல்விக் கட்டணங்களை நிர்ணயம் செய்துள்ளனர். கல்விக் கட்டணம் , மாணவர் சேர்க்கை கட்டணம், சிறப்பு கட்டணம், நூலகம், கம்ப்யூட்டர், இண்டர்நெட் கட்டணம், விளையாட்டு கட்டணம்,பாராமரிப்பு கட்டணம், பிற திறன்களுக்கான கட்டணம் உள்ளிட்ட தொடர் செலவினங்களையும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 65 சதவீதமும், நிர்வாக ஒதுக்கீட்டில் 35 சதவீதமும், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 50 சதவீதம் இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 50 சதவீதம் இடங்களும் நிரப்ப வேண்டும்.
கல்விக் கட்டணம்
- டிப்ளமோ சுகாதார ஆய்வாளர், சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்பிற்கு அரசு ஒதுக்கீட்டிற்கு 35 ஆயிரம், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 70 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- டிப்ளமோ நர்சிங் பொது பாடத்திற்கு அரசு ஒதுக்கீட்டில் 35 ஆயிரம், நிர்வாக ஒதுக்கீட்டில் 75 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- துணை செவிலியர் மகப்பேறு பட்டயப் படிப்பு அரசு ஒதுக்கீட்டிற்கு 30 ஆயிரம், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 60 ஆயிரமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- டிப்ளமோ பார்மசி அரசு ஒதுக்கிட்டிற்கு 25 ஆயிரம், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 50 ஆயிரமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- டிப்ளமோ மெடிக்கல் லேபாட்டரி சயின்ஸ்( DMLS ) அரசு ஒதுக்கீடு 20 ஆயிரம், நிர்வாக ஒதுக்கீடு 40 ஆயிரமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இளநிலை பட்டப்படிப்புகள்
- பிஎஸ்சி நர்சிங், போஸ்ட் பிஎஸ்சி நர்சிங் அரசு ஒதுக்கீட்டு கட்டணம் 60 ஆயிரம், நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணம் 1 லட்சத்து 20 ஆயிரமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- பிபார்ம், பிபிடி, பிஓடி, பிபார்ம் லேட்டரல் என்டரி அரசு ஒதுக்கீட்டு கட்டணம் 50 ஆயிரம், நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணம் 1 லட்சமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இளநிலை அளைடு ஹெல்த் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் 50 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கல்வி நிறுவனங்கள் போக்குவரத்து, ஹாஸ்டல், உணவகம் உள்ளிட்ட கட்டணங்களை தனியாக வாங்கிக் கொள்ளலாம். கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிக்க கூடாது. அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பல்கலைக் கழகத்திற்கு பரிந்துரைக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.