Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசு பணிகளில் 4% இட ஒதுக்கீடு – மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பதவிகள் என்ன?

4 Percent Reservation : அரசுப் பணிகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஜனவரி 30, 2026 அன்று புதிய அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன பதவிகள் வழங்கப்படும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அரசு பணிகளில் 4% இட ஒதுக்கீடு – மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பதவிகள் என்ன?
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Jan 2026 19:57 PM IST

சென்னை, ஜனவரி 30 : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு (Differently Abled Persons) 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஜனவரி 30, 2026 அன்று புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அரசாணையில், அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு ஆகிய இரண்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவிகிதம் இடஒதுக்கீடு எந்தெந்த பணியிடங்களில் வழங்கப்படும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016ன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு தலைமைச் செயலக சேவையில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தகுதி அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனத்தில் சம வாய்ப்பு வழங்கப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்ட இந்த அரசாணை மூலம், இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : திமுக கூட்டணியில் தேமுதிக? சஸ்பென்ஸ் வைத்த கனிமொழி.. எகிறும் எதிர்பார்ப்பு! எதிர்பார்ப்பு!!

அரசாணையின் படி, மாற்றுத்திறனாளிகளுக்காக அடையாளம் காணப்பட்ட பணியிடங்களில் உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், பிரிவு அலுவலர் (Section Officer), துணைச் செயலாளர், அலுவலக உதவியாளர், மூத்த அலுவலக உதவியாளர், மூத்த தனி உதவியாளர், தனி உதவியாளர், தனி செயலாளர், மூத்த தனி செயலாளர், பதிவு கிளர்க், பதிவு உதவியாளர், தட்டச்சர் மற்றும் மூத்த தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு பார்வைக் குறைபாடு, குறைந்த பார்வை, செவித்திறன் குறைபாடு, உடல் இயக்கக் குறைபாடு, நரம்பியல் குறைபாடுகள் மற்றும் மனநலக் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு மாற்றுத்திறன்கள் பரிசீலிக்கப்படவுள்ளன. ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ற மாற்றுத்திறன் வகைகள் தேர்வு செய்யப்படும் என்றும், பணியின் தன்மை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தகுதி நிர்ணயம் செய்யப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு Vs என்டிஏ இடையே தான் போட்டி”.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி

குறிப்பாக தட்டச்சர் மற்றும் மூத்த தட்டச்சர் பணியிடங்களுக்கு, வாசிப்பு புரிதல் திறன், துல்லியமான தட்டச்சுத் திறன் மற்றும் கணக்கீட்டு திறன் அவசியம் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்தத் தகுதிகள் உள்ள மாற்றுத்திறனாளிகள், இடஒதுக்கீட்டின் கீழ் அந்தப் பதவிகளுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்த புதிய அரசாணை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் சம வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில், பதவி உயர்விலும் நேரடி நியமனத்திலும் 4 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க அரசு உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளது. இது மாற்றுத்திறனாளிகளின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியமான ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.