உயர் கல்விக்கு வழிகாட்டுதல் வேண்டுமா?.. ஆலோசனை எண்ணை அறிவித்த பள்ளி கல்வித்துறை!
Helpline number for Higher Education Guidance | தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிக்க வழி காட்டும் வகையில் உதவி எண்ணை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை, மே 08 : தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் (12th Board Exam Results) வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களுக்கு உயர் கல்வி (Higher Education) குறித்து ஆலோசனை வழங்க பள்ளி கல்வித்துறை (School Education Department) ஆலோசனை எண்ணை அறிவித்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்களது உயர் கல்வி குறித்து இலவச ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலையில், மாணவர்கள் உயர் கல்வியை தேர்வு செய்யும் வகையில் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது
2025 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மார்ச் 03, 2025 முதல் மார்ச் 25, 2025 வரை தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், இன்று ( மே 08, 2025) காலை சரியாக 9 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் 95.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் அதில் 95.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்சி விகிதம் 0.47 சதவீதம் அதிகரித்துள்ளது.
உயர் கல்வி வழிகாட்டுதலுக்கு ஆலோசனை எண் வழங்கிய பள்ளி கல்வித்துறை
12 ஆம் வகுப்பு முடித்த பிறகு மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து பயில வேண்டும் என்ற நிலையில், எந்த படிப்பை தேர்வு செய்வது என தெரியாமல் பலரும் குழப்பத்தில் ஆழ்வது உண்டு. தங்களுக்கு எந்த படிப்பில் ஆர்வம் இருக்கிறது, எந்த படிப்பை தேர்வு செய்வதன் மூலம் சிறந்த எதிர்காலத்தை பெற முடியும் என்ற தெளிவு அவர்களிடம் இல்லாமல் இருக்கும். இந்த நிலையில், தான் மாணவர்கள் தங்களது உயர் கல்வி குறித்து தெளிவான முடிவை எடுக்க அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் எந்த கல்லூரியில் படிக்கலாம், கல்லூரிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம், கல்வி கட்டணம் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட தகவல்களை கேட்டு பெறவும், இவை குறித்த தெளிவான பார்வையை பெறவும் 14417 என்ற எண்ணை தொடர்புக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. தேர்ச்சி பெற்று உயர் கல்வி செல்லும் மாணவர்கள் மட்டுமன்றி, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணை தேர்வு தொடர்பான தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் இந்த உதவி எண்கள் மூலம் கேட்டு பெறலாம் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.