இண்டிகோ விமானங்களின் தாமதம் மற்றும் ரத்து செய்யப்படுவதன் காரணமாக, நாடு முழுக்க பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த குழப்பத்திற்கு நடுவே, சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில், ஒரு ஆட்டோ இண்டிகோ விமானத்தின் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு, அதில் இண்டிகோ என எழுதப்பட்டிருக்கிறது. அந்த ஆட்டோவில் விமானத்தில் உள்ளது போல இறக்கைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆர்பிஜி குழுமத் தலைவர் ஹர்ஷ் கோயெங்கா, இந்த வீடியோவைப் பகிர்ந்து, இண்டிகோவின் புதிய வண்டிகள், இனி பயணம் தாமதமாகாது, தடம் மாறாது. விலையும் குறைவு என கமெண்ட் செய்திருந்தார். அவரது கமெண்ட் பலருக்கும் சிரிப்பை வரவழைத்தன. இந்த நிலையில் இந்த வீடியோ பயணிகளிடையே வைரலாகி வரும் நிலையில், அது ஏஐ வீடியோவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் சரியான தருணத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.