இலங்கை ரசிகர்களின் ஆதரவு.. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்துக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு.. உருகும் மக்கள்!
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர் பிரச்சினை ஒரு முக்கியத் தேர்தல் முழக்கமாக முன்வைக்கப்படவில்லை. இருப்பினும், கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துத் தமிழர்களின் உணர்வுகளைத் தொட்டிருந்தார்.
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உட்பட இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த மற்றும் காணாமல் போன லட்சக்கணக்கான தமிழ் மக்களை நினைவுபடுத்தும் வகையில், அஞ்சலி செலுத்தினார். கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ல், இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவத்தால் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை நினைவு கூரும் வகையில் முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில், “முள்ளிவாய்க்கால் நினைவுகளை நெஞ்சில் சுமப்போம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ் தொப்புள்கொடி உறவுகளின் உரிமைகளுக்காக எப்போதும் துணையாக நிற்போம்!” என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். அவரைத்தொடர்ந்து, தவெக சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவுகூர்ந்து பதிவிட்டிருந்தனர்.
இலங்கையில் விஜய்க்கு ஆதரவு குரல்:
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!
— TVK Vijay (@TVKVijayHQ) May 18, 2026
பொதுவாகத் தமிழ்நாட்டில் ஆட்சிக்கட்டிலில் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் பிரபாகரனுக்கு ஆதரவாகத் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதைத் தவிர்த்து வரும் நிலையில், முதலமைச்சர் விஜய்யின் இந்தத் துணிச்சலான பதிவு அரசியல் அரங்கில் உற்றுநோக்கப்படுகிறது. குறிப்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் கூட, அடிக்கடி விஜய்யின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. ஈழத் தமிழர் தொடர்பான பிரச்சினைகளில் இந்திய மத்திய அரசுடனும், தமிழக அரசுடனும் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, இலங்கையில் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ள நிலையில், அவர் முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்ததை பார்த்து அங்கு ரசிர்கள் உருக்கம் தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் தொடர் அரசியல் நிலைப்பாடு:
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர் பிரச்சினை ஒரு முக்கியத் தேர்தல் முழக்கமாக முன்வைக்கப்படவில்லை. இருப்பினும், கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துத் தமிழர்களின் உணர்வுகளைத் தொட்டிருந்தார். அப்போது பேசிய அவர், “நம்முடைய தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள், இலங்கையில் இருந்தாலும் சரி அல்லது உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் சரி, தங்களுக்குத் தாய் போன்ற அன்பைக் காட்டிய ஒரு தலைவனை (பிரபாகரனை) இழந்து இன்று தவித்து வருகிறார்கள். அவர்களுக்காகக் குரல் கொடுப்பது நம்முடைய கடமையாகும்” என்று பிரபாகரனை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பின்னணி:
கடந்த 1991-ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தொடர்பு இருந்ததால், இந்தியாவில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாகப் பிரபாகரன் அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், உலகெங்கும் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்களும், தமிழகத்தில் உள்ள தமிழர்களில் ஒரு பகுதியினரும் மே 18-ஆம் தேதியை ‘முள்ளிவாய்க்கால் நினைவு நாள்’ அல்லது ‘தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக’ கடைப்பிடித்து வருகின்றனர்.
2009-ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போர் முள்ளிவாய்க்கால் கடற்கரை கிராமத்தில் மிகக் கொடூரமான இறுதிக்கட்டப் போருடன் முடிவுக்கு வந்தது. அந்த இறுதித் தாக்குதலின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் மற்றும் காணாமல் போயினர். அவர்களின் நினைவாகவே இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. இலங்கையில் தங்களுக்கு இழைக்கப்படும் பாகுபாடுகளுக்கு எதிராக, இலங்கைத் தமிழர்களுக்கெனத் தனி நாடு கோரித் தொடங்கிய இந்தத் தன்னுரிமைப் போராட்டம், இறுதிக்கட்டப் போரில் முழு அளவிலான ஆயுதப் போராட்டமாக மாறி, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நீடித்த ஒரு மிகப்பெரிய இனப்போராக உருவெடுத்தது.