Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரதமர் மோடியிடம் மனு.. முதல்வர் ஸ்டாலின் வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்.. என்ன விஷயம்?

CM Stalin Memorandum To PM Modi : தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில்  இருக்கும் நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம்  மனு அளித்துள்ளார்.

பிரதமர் மோடியிடம் மனு.. முதல்வர் ஸ்டாலின் வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்..  என்ன விஷயம்?
பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 27 Jul 2025 11:35 AM

சென்னை, ஜூலை 27 :  தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில்  இருக்கும் நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம்  மனு அளித்துள்ளார்.  கல்விக்கான நிதி, ஏழை – நடுத்தர மக்களின் போக்குவரத்துக்காக இரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் மனு அளித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   2025 ஜூலை 24ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு பல்வேறு பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. அதோடு, அவருக்கு அஞ்சியோ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.

இதற்கிடையில் தான்,  பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக 2025 ஜூலை 26ஆம் தேதியான நேற்று இரவு  தமிழகத்திற்கு வருகை தந்தார்.  தூத்துக்குடி விமான  நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.   அவரை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர்.  அப்போது, பிரதமர் மோடியிடன் அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்வர் ஸ்டாலின்  அளித்த மனுவை அவரிடம் வழங்கினார். அந்த மனுவில் பல்வேறு விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Also Read : தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. முதலமைச்சரிடம் இருந்து செல்லும் கோரிக்கை மனு!

முதல்வர் ஸ்டாலின் வைத்த முக்கிய கோரிக்கைகள்


இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதி, ஏழை – நடுத்தர மக்களின் போக்குவரத்துக்காக இரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

2024 -25ஆம் ஆண்டுக்கான நிலுவையில் உள்ள ரூ.2,151.59 கோடியையும், 2025-26ஆம் ஆண்டுக்கான முதல் தவணை நிதியையும் விரைவாக வழங்க வேண்டும். பிஎம்ஸ்ரீ புரிந்துணைர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிபந்தனையாக்காமல் விடுவிக்கவும். சேலம் உருக்கால மிகை நிலங்களை பாதுகாப்புத் தொழிற்பூங்காவிற்கு வழங்க வேண்டும்.

பத்தாண்டுகளுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படாமல் உள்ள திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை, ஈரோடு – பழனி, அருப்புக்கோட்டை வழியாக மதுரை – தூத்துக்குடி, அத்திப்பட்டு – புத்தூர், மாமல்லபுரம் வழியாக சென்னை -கடலூர் ஆகிய இரயில் பாதைத் திட்டங்களைச் செயல்படுத்திடுக.

Also Read : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை – அமைச்சர் துரைமுருகன்!

சென்னைப் புறநகர் இரயில் சேவைகளின் இடைவெளி நேரத்தை குறைத்திடுக, தாம்பரம் – செங்கல்பட்டு இடையேயான 4-வது வழித்தடம் மற்றும் ஆவடி – திருப்பெரும்புதூர் இரயில் பாதையை விரைவாகச் செயல்படுத்திடுக. கோவை, மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திடுக.

இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவது ஏழை மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மோசமாக பாதித்துள்ளது. இந்த சிக்கலான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் நேரடி கவனத்தைச் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.