முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை – அமைச்சர் துரைமுருகன்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நல்லதாக உள்ளன எனவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வரின் டிஸ்சார்ஜ் தேதி மருத்துவர்களுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாக திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன் தெரிவித்துள்ளார். பரிசோதனையில் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும், முதலமைச்சர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் துரைமுருகன் கூறியிருக்கிறார். அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து முதலமைச்சரும், மருத்துவர்களும் பேசி முடிவெடுப்பார்கள் எனவும் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். இப்படியான நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை மருத்துவமனையில் நேரில் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, “முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் தமிழ்நாடு மக்களுக்காக எவ்வளவோ நன்மைகள் செய்திருக்கிறார். தமிழ்நாடு மக்களின் பிரார்த்தனைகளின்படி, எல்லாரும் எதிர்பார்த்த மாதிரி ஒன்றும் இல்லாமல் முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.
மக்கள் பணி செய்யும் முதலமைச்சர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில வாரங்களாகவே தொடர்ச்சியாக கட்சி பணிகள், அரசின் நலத்திடங்கள் தொடக்க விழா, மக்கள் சந்திப்பு என அடுத்தடுத்து பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்து வந்தார். அதேசமயம் சமீபத்தில் அவரின் சகோதரர் மு.க.முத்து காலமான நிலையில் மிகுந்த சோர்வுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது.




இதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கட்சி பணிகள் மேற்கொள்ள வந்த அவர் திடீரென ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ள சென்றார். தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினர். இதனை அடுத்து ஜூலை 22 மற்றும் ஜூலை 23ஆம் தேதி திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் செல்வதாக இருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மருத்துவமனையில் இருந்தே மக்கள் பணி.. மக்களிடம் கலந்துரையாடி முதல்வர் ஸ்டாலின்!
முதலமைச்சர் வெளியிட்ட வீடியோ
மருத்துவமனையில் இருந்தபடியே #உங்களுடன்_ஸ்டாலின் முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன்.
மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்! pic.twitter.com/UYlcZz5yey
— M.K.Stalin (@mkstalin) July 23, 2025
மேலும் அவருக்கு தலை சுற்றல் இருந்ததால் சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனைகள் தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடைபெற்றது. தற்போது ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்தவாறு அரசு பணிகளை கவனித்து வருகிறார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டார்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார்.. விரைவில் டிஸ்சார்ஜ் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்..
கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 45 நாட்களில் பொதுமக்களின் அரசு துறைகள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களிடமும் பொதுமக்களிடமும் அவர் காணொளி வாயிலாக கலந்துரையாடி கேட்டறிந்தார். மேலும் விரைவில் உங்களை சந்திக்க உங்கள் மாவட்டத்திற்கு வருகிறேன் எனவும் அவர் தனது பதிவில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.