முதல்வர் ஸ்டாலினுக்கு 3 நாட்கள் ஓய்வு தேவை – மருத்துவமனை அறிக்கை
CM Stalin Health Update : முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மருத்துவமனையின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல்வர் ஸ்டாலின் நலமுடன் இருக்கிரார் என்றும் அவருக்கு 3 நாட்கள் ஓய்வு தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் இருந்தே பணி செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) ஜூலை 21, 2025 அன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth), நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொலைபேசி வாயிலாக முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையின் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு சில பரிசோதனைகள் செய்ய வேண்டியிருப்பதாகவும், அவர் 3 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை
முதலமைச்சரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் நலமடைந்து வருகிறார். அவருக்கு மேலும் சில பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கிறது. அவர் மேலும் 3 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். மருத்துவமனையிலிருந்தே தமது அதிகாரப்பூர்வ கடமைகளை தொடர்வார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: முதல்வரின் உடல் நலம் குறித்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நலம் விசாரிப்பு!
முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி
முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல் நலம் குறித்து பிரதம் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக விசாரித்து தெரிந்துகொண்டார். அப்போது அவருக்கு நடைபெறும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
இதையும் படிக்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவனையில் திடீர் அனுமதி.. என்ன நடந்தது?
உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
துர்கா ஸ்டாலின் வெளியிட்ட அவரும் நானும் பாகம் 2 புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலினின் உடல் நலம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமாக இருக்கிறார். கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து ஏற்பட்டுள்ள வேலைப் பளுவால் சிறிய அளவில் தலைசுற்றல் ஏற்பட்டது. மருத்துவர்கள் நன்றாக கவனித்துக் கொண்டு வருகிறார்கள். இன்று நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க முடியாமல் போனது குறித்து அவருக்கே வருத்தமாக இருந்தது. ஆனால் அவர் நிகழ்ச்சியைக் முழுமையாக நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். நாளை சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. அவருக்கு ஓரிரு நாட்கள் ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். விரைவில் அவர் முழுமையாக குணமடைந்து, வழக்கம்போல் தனது பொறுப்புகளை மேற்கொள்வார்.” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.