மருத்துவமனையில் இருந்தே ஆய்வு பணி.. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
CM MK Stalin Hospitalized : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து, மூன்று நாட்களுக்கு பிறகு அவர் வீடு திரும்ப உள்ளார். இந்த சூழலில், மருத்துவமனையில் இருந்தபடியே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை 22 : மருத்துவமனையில் இருந்தபடியே ஆய்வுப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் (Ungaludan Stalin Scheme) குறித்து அதிகாரிகளுக்கு மருத்துவமனையில் இருந்தபடியே உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். 2025 ஜூலை 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம்கள் செயல்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் 3,768, ஊரக பகுதிகளில் 6,232 என மொத்தம் 10 ஆயிரம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் பல்வேறு அரசு தொடர்பான சந்தேகங்கள், கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. குறிப்பாக, ரேஷன் கார்டில் மாற்றம், ஆதார் அட்டை திருத்தம், மகளிர் உரிமைத் தொகை போன்றவை மேற்கொள்ளலாம்.
இந்த திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்து வருகிறார். இந்த சூழலில், 2025 ஜூலை 21ஆம் தேதியான நேற்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, திடீரென தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : திமுக எம்.பி.க்கள் கூட்டம்: நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் என்னென்ன? என முடிவு
மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வர் ஆய்வு
மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்.#உங்களுடன்_ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை – தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில்…
— M.K.Stalin (@mkstalin) July 22, 2025
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை – தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.
Also Read : 2.5 கோடி பேரை கழக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..
முதல்வர் ஸ்டாலின் மூன்று நாட்கள் ஓய்வுக்கு பிறகு, வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களாக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அவருக்கு உடல்நலக்கு குறைவு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.