Minister Sivasankar: தமிழ்நாட்டில் மீண்டும் மினி பேருந்து சேவை.. பயன்கள் குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!
Tamil Nadu Mini Bus Services: தமிழ்நாட்டில் 2025 ஜூன் 16 முதல் புதிய மினி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 3,103 புதிய வழித்தடங்களில் 2,000க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் இயக்கப்படும். கிராமப்புற மக்களின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

தஞ்சாவூர், ஜூன் 16: தமிழ்நாட்டில் இன்று அதாவது 2025 ஜூன் 16ம் தேதி முதல் புதிய மினி பஸ் சேவைகள் (Mini Bus) தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னையில் மட்டும் மினி பஸ் திட்டம் செயல்பட்டு வந்தது. அதன்பிறகு ரோடு போடுதல், கொரோனா பரவல் போன்ற காரணங்களாக மினி பஸ் சேவை பல பகுதிகளில் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், தமிழ்நாடு முழுவதும் மினி பஸ் சேவைக்கான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) தஞ்சாவூரில் தொடங்கிவைத்தார். தலைநகர் சென்னையை பொறுத்தவரை 72 புதிய பாதைகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில், வட சென்னையில் 33 பாதைகளும், தென்சென்னையில் 39 பாதைகளும் உள்ளன. அதன்படி, தற்போது 20 தனியார் மினி பேருந்து இயக்கப்படுகிறது. ஒரு பேருந்தில் பாதையின் நீளமானது 25 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதுதொடர்பாக, தஞ்சாவூரில் மினிபேருந்து சேவை குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் (Transport Minister Sivasankar) விளக்கமளித்துள்ளார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்:
மினி பேருந்து சேவை குறித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், “கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது,பேருந்து வசதிகள் இல்லாத குக்கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தந்த திட்டம்தான் இந்த மினி பேருந்து திட்டம். இடைக்கால அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியின்போது அதற்கான உதவிகளை செய்யாமல், பிரச்சனைகளை சரிசெய்யாமல் விட்டதால் இந்த திட்டம் முடங்கிபோய் விட்டது.




மினி பேருந்து சேவை தொடக்கம்:
புதிய விரிவான மினி பஸ் திட்டம்-2024ன் படி பேருந்து வசதி கிடைக்கப் பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 3,103 மினிபஸ் வழித்தடங்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைக்கும் விதமாக, தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி… pic.twitter.com/1SRFvsAwFu
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 16, 2025
மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, இந்த திட்டத்தை மறுசீரமைக்க வேண்டும், போக்குவரத்து ஊழியர்களின் சிரமங்களை நீக்க வேண்டும், தொடர்ந்து புதிய சேவைகள் ஏற்படுத்தி இன்னும் மக்கள் தொகை குறைவாக உள்ள கிராமங்கள், சாலை அமைப்பு குறைவாக உள்ள கிராமங்களுக்கு மினி பேருந்துகளை இயக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. இந்த திட்ட அறிவிப்பின்படி, இன்று அதாவது 2025 ஜூன் 16 முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம், தமிழ்நாடு முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட புதிய மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தஞ்சாவூரை பொறுத்தவரை 144 மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும், இந்த மினி பேருந்து சேவை நாளை அதாவது 2025 ஜூன் 17ம் தேதி தொடங்கப்பட இருக்கிறது. முற்றிலும் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் இந்த மினி பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.