லண்டன் சென்ற முதல்வர் ஸ்டாலின்… தமிழர்கள் உற்சாக வரவேற்பு.. முதலீட்டாளர்களுக்கு மீட்டிங்!
CM MK Stalin London Visit : தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு லண்டன் புறப்பட்டு சென்றார். லண்டன் சென்ற அவருக்கு அங்கிருக்கும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். லண்டனில் பல்வேறு முதலீட்டாளர்களை அவர் சந்திக்க உள்ளார்.

சென்னை, செப்டம்பர் 03 : ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் லண்டன் (CM MK Stalin London Visit) சென்றுள்ளார். லண்டன் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி, முதல்வர் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் எட்டு நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் லண்டனுக்கு 2025 ஆகஸ்ட் 30ஆம் ததி புறப்பட்டார். தனது பயணத்தின் முதற்கட்டமாக, முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி புறப்பட்டு சென்றார். ஜெர்மனி சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. குறிப்பாக, ரூ.7020 கோடி முதலீட்டிற்கான 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இவற்றின் மூலம் 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி பயணத்தில் பல்வேறு முதலீட்டாளர்களையும் அவர் சந்தித்தார். மேலும், தமிழ்நாடு ஜெர்மனியின் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா ஆகிய இருதரப்பு உறவுகளை மேம்படுத்த அம்மாநில அமைச்சர் அதிபர் ஹென்ட்ரிக் வுஸ்ட்டை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பில் இவர்களை தமிழகத்திற்கு வருகை தருமாறு அழைத்தார். ஜெர்மனி பயணத்தை முடித்த முதல்வர் ஸ்டாலின், 2025 செப்டம்பர் 3ஆம் தேதியான லண்டன் சென்றார்.




Also Read : முதலீடுகளை ஈர்க்க 7 நாள் பயணம்.. ஜெர்மனி, இங்கிலாந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின்!
லண்டன் சென்ற முதல்வர் ஸ்டாலின்
Setting foot in #England, I was embraced with warmth and affection, a welcome that carried the fragrance of home across distant shores.#CMStalinInEurope pic.twitter.com/qS3ROfSZbg
— M.K.Stalin (@mkstalin) September 3, 2025
லண்டன் சென்ற அவருக்கு, தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இங்கிலாந்து மக்கள் அரவணைப்பு, பாசத்துடன் உற்சாக வரவேற்பு அளித்ததாக புகைப்படத்துடன் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். லண்டன் சென்ற முதல்வர் ஸ்டாலின், 2025 செப்டம்பர் 3ஆம் தேதியான இன்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். தொடர்ந்து, லண்டனில் தொழில் அதிபர்களை சந்திக்க உள்ளார்.
2025 செப்டம்பர் 4ஆம் தேதி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நலவாரியம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். செப்டம்பர் 6ஆம் தேதி லண்டனில் உள்ள தமிழர் நலவாரிய நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார். தொடர்ந்து, 2025 செப்டம்பர் 7ஆம் தேதி மாலை லண்டனில் இருந்து புறப்பட்டு, 2025 செப்டம்பர் 8ஆம் தேதி கொலை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.