AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை.. முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்க திட்டம்!!

Tamil Nadu Cabinet Meeting: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் வரும் வியாழக்கிழமை அன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. புதிய மின்சாரக் கொள்கை, பேட்டரி ஸ்டோரேஜ் திட்டம் மற்றும் முக்கிய தொழில் முதலீடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை.. முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்க திட்டம்!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 Oct 2026 11:56 AM IST

சென்னை, அக்.27: தமிழகத்தில் ஆளுங்கட்சியான தவெக அரசின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்களும், நிர்வாகச் சீர்திருத்தங்களும் அதிரடியாக முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், மாநிலத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை நிர்ணயிக்கும் மிக முக்கிய அமைச்சரவைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அதன்படி, வரும் வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளது. அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவுகள், புதிய தொழில் முதலீடுகள் மற்றும் பொதுமக்களின் நலன் சார்ந்த பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கு இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படவுள்ளதால் அரசியல் மற்றும் வணிக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிக்க: தேனி சிறை கைதிகள் தப்பியோட்டம்.. “நிர்வாக லட்சணத்தை கண்டு ஊரே சிரிக்கிறது!”.. தவெக அரசை விளாசிய இபிஎஸ்!!

புதிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கத் திட்டம்:

தற்போதைய சூழலில் மாநிலத்தில் நிலவிவரும் மின்தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையிலும், எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டும் பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக, பகல் நேரத்தில் உற்பத்தியாகும் சூரிய ஒளி மின்சாரத்தைப் பாதுகாப்பாகச் சேகரித்துத் தேவையின்போது பயன்படுத்தும் விதமாக ‘பேட்டரி ஸ்டோரேஜ்’ (Battery Storage) கொள்கை சார்ந்த மிக முக்கியத் திட்டம் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. மேலும், நிர்வாக ரீதியில் முழுமையான வெளிப்படைத் தன்மையைப் பேணிக் காக்கும் நோக்கில் சில புதிய சட்ட மசோதாக்களுக்கான ஒப்புதல்களும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அவசியம்:

மாநிலத்திற்குத் தேவையான புதிய தொழிற்சாலைகள் மற்றும் பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், புதிதாக வரவுள்ள தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான அனுமதிகளை வழங்குவது கேபினட் கூட்டத்தின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே சாத்தியமாகும். தலைமைச் செயலாளர் சாய் குமார், தொழில்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டத்தில், நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது. முந்தைய திமுக ஆட்சி காலத்தில் மாதந்தோறும் தவறாமல் அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்தப்பட்டதைப் போல, தற்போதைய அரசும் நிர்வாக நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆவின்.. பண்டிகைக் காலத்தில் நெய், வெண்ணெய், இனிப்புப் பொருட்களின் விலை கடும் உயர்வு!!

அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு:

கடந்த சில வாரங்களாக இடைத்தேர்தல் பணிகள் மற்றும் இதர முக்கிய அரசுப் பணிகளால் அமைச்சரவைக் கூட்டம் சற்று தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களின் கடந்த காலச் செயல்பாடுகள் குறித்தும் முதல்வர் விஜய் ஆய்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த அமைச்சர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட துறைகளில் சரியாகச் செயல்படவில்லை என்பது குறித்த அளவீடுகளைக் கண்காணித்து, பின்தங்கும் அமைச்சர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் முதல்வர் வழங்குவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக அரசு தரப்பில் பல அதிரடியான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us