நீங்கள் வாங்கிய மின்மாற்றிகள் லட்சணம் தெரியும்.. அமைதியாக இருக்கலாம் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் vs செந்தில் பாலாஜி..
கடந்த ஆட்சியில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் அவற்றில் பெரும்பாலான திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்படவில்லை. 90 ஆயிரம் மின்மாற்றிகள் வாங்கியதாக கூறப்படுகிறது. அதில் 44 ஆயிரம் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது சிபிஐ விசாரணையில் உள்ளது. மின்மாற்றிகள் வாங்கிய லட்சணம் தெரியும் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
ஜூன் 22, 2026: மின்சாரத் துறை தொடர்பான விரிவான வெள்ளை அறிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், அவை குறித்து முதலமைச்சரின் ஆலோசனையின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் மின்விநியோகம் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்தார்.
இரண்டு நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்:
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மின்வெட்டு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். ஆனால் மாநிலம் முழுவதும் எங்கு, எந்த காரணத்தால் மின்தடை ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தினந்தோறும் தகவல்களை வெளியிட்டு வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளாக மின்துறையில் தேவையான உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்த விரிவான விவரங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்துறையில் எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டனர், எவ்வளவு காலிப்பணியிடங்கள் உள்ளன என்பதற்கான விவரங்களும் அதில் இடம்பெறும். தற்போது மின்வெட்டு பிரச்சினைகளை சரிசெய்ய 125 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 500 பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு மின்விநியோக குறைபாடுகளை உடனுக்குடன் சரிசெய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: அமோனியா வாயு கோரத்தாண்டவம்.. பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு.. மரண பிடியில் 10 தொழிலாளர்கள்!
70 ஆயிரம் காலிப்பணியிடங்கள்:
மின்துறையில் சுமார் 70 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் எங்கு மின்தடை ஏற்படுகிறது, அதற்கான காரணங்கள் என்ன என்பதைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மின்கம்பி மற்றும் பியூஸ் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் இல்லாத பகுதிகளில் ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.
தற்போதைய அரசு திட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும் – செந்தில் பாலாஜி:
இதற்கு பதிலளித்து பேசிய முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “கடந்த ஆட்சிக் காலத்தில் 393 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றில் பெரும்பாலானவை முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. ஆண்டுதோறும் அதிகரிக்கும் மின் தேவையை கருத்தில் கொண்டு புதிய மின் உற்பத்தி திட்டங்களும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.
மேலும் படிக்க: தவெக ஆட்சியிலும் ஹிந்துக்கள் மீதான விரோதம் தொடர்கிறது.. நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!
கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 90 ஆயிரம் மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) புதிதாக நிறுவப்பட்டதுடன், பழைய மின்மாற்றிகளும் சீரமைக்கப்பட்டன. மின் தேவை அதிகரிக்கும் சூழலில் அதற்கேற்ப நிர்வாக ரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்வது அரசின் கடமையாகும்.
தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு, மின்துறை அதிகாரிகளுடன் போதிய அளவில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை என துறையில் பணியாற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவித பெரிய மின்தடையும் இல்லாமல் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டது. எனவே, தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விட தற்போதுள்ள திட்டங்களை ஆய்வு செய்து, அவற்றை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
மின்மாற்றிகள் விவகாரம் – சிபிஐ விசாரணை:
இதற்கு மீண்டும் பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “கடந்த ஆட்சியில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் அவற்றில் பெரும்பாலான திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்படவில்லை. 90 ஆயிரம் மின்மாற்றிகள் வாங்கியதாக கூறப்படுகிறது. அதில் 44 ஆயிரம் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது சிபிஐ விசாரணையில் உள்ளது. மின்மாற்றிகள் வாங்கிய லட்சணம் தெரியும்.
எனவே தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க வேண்டும். மின்துறையின் நிலைமை, திட்டங்கள், காலிப்பணியிடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய வெள்ளை அறிக்கை அடுத்த இரண்டு நாட்களில் வெளியிடப்படும். அதன் பின்னர் மின்சாரத் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது விரிவாக விவாதிக்கலாம்” என தெரிவித்தார்.