விருப்ப மனு விநியோகத்தை தொடங்கிய அரசியல் கட்சிகள்.. தமிழகத்தில் பரபரக்கும் தேர்தல் களம்!!
Tamil Nadu 2026 Assembly polls: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. அந்தவகையில், எதிர்க்கட்சியான அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் பணிகள் தொடங்கியுள்ளன.
சென்னை, டிசம்பர் 15: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோகமானது இன்றைய தினம் பகல் 12 மணி முதல் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, காங்கிரஸ், அமமுக, பாமக அன்புமணி தரப்பு உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு பெறும் பணிகளை தொடங்கிய நிலையில், தற்போது அதிமுகவும் அப்பணிகளை தொடங்கியுள்ளது. அந்தவகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளது. அதேசமயம், இந்த விருப்ப மனுவை பெறப்பட்ட பிறகு அதனை பூர்த்தி செய்து அதற்கான நகல்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அக்கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து, டிசம்பர் 23ம் தேதி வரை அதிமுக விருப்ப மனு பெறப்பட உள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் பிறப்பு விகிதம் கடும் சரிவு.. முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு.. ஷாக் ரிப்போர்ட்!!
தமிழகத்தில் வேகமெடுக்கும் தேர்தல் பணிகள்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, விருப்ப மனுக்கள் வாங்கும் பணியை துவக்கி உள்ளன. அடுத்த சில நாட்களில், கூட்டணி பேச்சை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளன. அந்தவகையில், ஆளும் திமுக அரசு, மண்டல வாரியாக இளைஞர் அணி மாநாடு நடத்துவது, வீடு வீடாகச் சென்று அரசு நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துரைப்பது என மும்முரமாக தேர்தல் பணியில் திமுக ஈடுபட்டுள்ளது.




அதேபோல், அதிமுக தரப்பில் ஏற்கெனவே, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொகுதி வாரியாக கட்சியினரை சந்திப்பதுடன் வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறார். முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெகவும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.
விருப்ப மனு பெறும் காங்கிரஸ், அமமுக, பாமக:
அதேபோல, அந்தந்த கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், விண்ணப்பங்கள் பெறும் பணியையும் அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ளன. அந்தவகையில், காங்கிரஸ் மற்றும் அமமுக சார்பில், கடந்த 10ம் தேதியில் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. அமமுகவில் விண்ணப்ப மனு ரூ.10,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம், காங்கிரஸில் கட்டணம் கிடையது. அதேபோல், பாமக அன்புமணி தரப்பும் விருப்ப மனு பெறும் பணியை தொடங்கியுள்ளது. அதன்படி, பொது தொகுதிக்கு ரூ.10,000, தனி தொகுதிக்கு ரூ.5,000, பெண்களுக்கு ரூ.5,000 ரூபாய் என கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஓபிஎஸ்-டிடிவிக்கு நோ சொன்ன இபிஎஸ்…அதிருப்தியில் பாஜக…அடுத்த நகர்வு என்ன!
அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்:
இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் பணிகள் தொடங்கியுள்ளன. தொடர்ந்து, டிசம்பர் 23ம் தேதி வரை அதிமுக விருப்ப மனு பெறப்பட உள்ளது. இந்த விருப்ப மனு விநியோகம் முடிந்த பின்னர், ஒவ்வொரு தொகுதியிலும் யார் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்பது தொடர்பாக கூட்டம் நடத்தி அதன் பின்னர் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவர் என்பதே அதிமுக நடைமுறை. ரூ.15,000க்கான காசோலையை செலுத்தி இந்த விருப்ப மனுவை பெற்றுக்கொள்ள அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.