பழைய சாதத்தில் இவ்வளவு நன்மைகள்.. ஆய்வு முடிவு குறித்து பேசிய அமைச்சர்!
Old Rice Benefits: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மேற்கொண்ட ஆய்வில் பழைய சாதத்தில் பல்வேறு நன்மைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை அமைச்சர் மா.சுப்ரமணியன் பட்டியலிட்டுள்ளார். இது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை அண்மையில் ஒரு ஆய்வை மேற்கொண்டிருந்தது. அந்த ஆய்வில் பழைய சோறு நமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிப்பதிலும், வாழ்க்கை முறை மற்றும் இரைப்பை குடல் நோய்களின் ஆபத்தை குறைப்பதிலும் சிறந்த பங்களிப்பதாக அதில் தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். மருத்துவமனையில் வாழ்க்கை முறை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி துறை, இரைப்பை குழல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், புதிதாக சமைக்கப்பட்ட சாதத்துடன் ஒப்பிடுகையில், பழைய சாதத்தில் ஊட்டச்சத்து அதிக அளவு உள்ளது தெரிய வந்தது.
பழைய சாதத்தில் உள்ள நன்மைகள்
இதில், உணவு நார்சத்து 631 சதவீதம், எதிர்ப்பு திறன் கொண்ட மாவுச்சத்து 270 சதவீதம் மற்றும் புரத உள்ளடக்கம் 24 சதவீதம் அதிகரிப்பு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. மேலும், துத்தநாகம், செலினியம் மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் கணிசமாக இருப்பதையும், இரும்பு உறிஞ்சுதல் கிட்டத்தட்ட 12 மடங்கு மேம்பட்டதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த கருத்தரங்கில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், பாரம்பரிய உணவு முறைகளின் மருத்துவ பொருத்தத்தையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
மேலும் படிக்க: ரேசன் கடை விடுமுறையில் மாற்றம்..பொங்கல் பரிசுக்காக புது உத்தரவு.. முழு விவரம் இதோ!




பழைய சாதத்தின் ஆரோக்கியமான நன்மைகள்
பழைய சாதம் நமது முன்னோர்களிடமிருந்து பெறப்பட்ட ஒரு பழக்கம் மட்டுமல்ல. இதில் உள்ள ஆரோக்கியமான நன்மைகளை அறிவியல் நமக்கு கண்டறிந்து தெளிவுபடுத்தி உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் பழைய சாதத்தில் உள்ள பாக்டீரியாக்கள் தீவிரமாக நன்மை செய்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் செரிமானத்தை பாதுகாப்பதுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வலுப்படுத்தி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரியல் ரீதியாக செயல்படும் சேர்மங்களை உற்பத்தி செய்கிறது.
பல்வேறு நோய்களுக்கு அருமருந்து பழைய சாதம்
பழைய சாதம் உட்கொள்வதால் நீரிழிவு நோய், நோய் உடல் பருமன், இருதய நோய்கள் மற்றும் சில புற்று நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது. இது ரத்தத்தில் உள்ள லிப்பிட் அளவை குறைப்பதுடன், கல்லீரலில் தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் மற்றும் நச்சு அமிலங்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு கருவின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. குறை பிரசவம் ஏற்படுவதை குறைப்பதுடன், கர்ப்பகால நீரிழிவு மற்றும் கர்ப்பத்தால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைக்கிறது.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
மேலும், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்று வலி, எரிச்சலுடன் கூடிய குடல் நோய் அறிகுறி, வீக்கம் மற்றும் வாயு தொடர்பான கோளாறுகளை பழைய சாதம் சரி செய்கிறது. நான் சிறு வயதிலிருந்து வாரத்துக்கு இரண்டு முறை பழைய சாதத்தை சாப்பிட்டு வருகிறேன். தற்போது, இந்த ஆய்வுக்குப் பிறகு தினம்தோறும் பழைய சாதம் சாப்பிடுவதை வழக்கமாகி கொள்ள உள்ளேன். பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
மேலும் படிக்க: தவெகவில் இணைந்த காமராஜர் பேத்தி…விரைவில் பொறுப்பு!