Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகம் முழுவதும் நடந்த வாக்காளர் சிறப்பு தீவிர முகாம்.. 2 நாட்களில் 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்..

4.42 lakh people applied in special camps: இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த முகாம்களில், 4,42,070 பேர் படிவம்–6 மற்றும் 6A ஆகியவற்றை சமர்ப்பித்துள்ளனர். மேலும், இறந்த 4,741 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க, அவர்களின் குடும்பத்தினர் படிவம்–7 ஐ அளித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் நடந்த வாக்காளர் சிறப்பு தீவிர முகாம்.. 2 நாட்களில் 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்..
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 29 Dec 2025 10:18 AM IST

தமிழகம் முழுவதும் நடந்த சிறப்பு தீவிர முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை சீரமைக்க தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (Special Intensive revision) மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், பீகாரில் தொடங்கிய இந்த பணி, தற்போது 2வது கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடந்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் மொத்தம் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து, முகவரி மாறியவர்கள், விடுபட்டவர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர்களாக மீண்டும் சேர ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 18ம் தேதி வரை படிவம்-6ஐ பூர்த்தி செய்து வழங்கலாம்.

இதையும் படிக்க : விஜயகாந்த் நினைவு தினம்.. தலைவர்கள் மரியாதை.. பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் அமைதி பேரணி!

சென்னையில் சிறப்பு முகாம்:

அந்தவகையில், முதற்கட்டமாக சென்னை மாவட்டத்தின் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான 4,079 வாக்குச்சாவடிகளில், பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த 27ம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் சிறப்பு தீவிர முகாம்கள் நடைபெற்றன. இதில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத 18 வயது நிரம்பியவர்கள் படிவம்-6 மூலம் பெயர் சேர்க்கவும், இறந்தவர்களின் பெயர்களை நீக்க படிவம்-7 மூலம் கோரிக்கைகள் அளிக்கவும் வசதி செய்யப்பட்டது. முகவரி மாற்றம் மற்றும் பிற திருத்தங்களுக்கான படிவங்களும் பெறப்பட்டன.

வாக்காளர்களுக்கு ஒரு மாத அவகாசம்:

அதேபோல், நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களில், சுமார் 66 லட்சம் பேர் முகவரி மாற்றம் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டவர்களாக பதிவாகியுள்ளனர். தற்போது, மீண்டும் வாக்காளராக சேர்வதற்காக ஒரு மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முகவரி மாறிய வாக்காளர்கள், தாங்கள் தற்போது வசிக்கும் பகுதியின் வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் படிவ எண் 6 ஐ சமர்ப்பித்து, மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் படிவங்களை பெறுவதும், ஏற்றுக்கொள்வதும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி செய்து வருகின்றனர்.

மீண்டும் பெயர் சேர்க்க ஆவணங்கள் கட்டாயம்:

தமிழகத்தில் திமுகவிற்கு 68,251, அதிமுகவிற்கு 67,281, பாஜகவிற்கு 61,438 மற்றும் காங்கிரசிற்கு 30,587 தேர்தல் முகவர்கள் உள்ளனர். இவர்கள் தங்களது தொகுதிகளில் இருக்கும் வாக்காளர்களை சந்தித்து, அவர்களிடமிருந்து தேவையான படிவங்களை பூர்த்தி செய்து பெற்று, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர். அவ்வாறு, பெயர் சேர்த்துக் கொள்ள விரும்புவோர், பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை அல்லது பெற்றோர் வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்களைக் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டனர்.

4.42 லட்சம் பேர் விண்ணப்பம்:

இதனிடையே, சிறப்பு தீவிர முகாமின் முதல் நாளான நேற்று முன்தினம் (டிசம்பர் 27), 18 வயது நிரம்பிய தகுதியுடைய 1,85,277 பேர் விண்ணப்பித்திருந்தனர். தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும் (டிசம்பர் 28) முகாம் நடைபெற்றது. மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த முகாம்களில், 4,42,070 பேர் படிவம்–6 மற்றும் 6A ஆகியவற்றை சமர்ப்பித்துள்ளனர். மேலும், இறந்த 4,741 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க, அவர்களின் குடும்பத்தினர் படிவம்–7 ஐ அளித்துள்ளனர்.

இதையும் படிக்க : தவெக போட்டியிடும் சின்னம் எது தெரியுமா? வெளியானது முக்கிய அப்டேட்…கட்சியினர் குஷி!

ஜனவரி 3 மற்றும் 4ஆம் தேதிகளில் அடுத்த முகாம்:

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த முகாம்களின் மூலம் பல வாக்காளர்கள் பயன் பெற்றுள்ளனர். இந்த முகாமில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்காக, வரும் ஜனவரி 3 மற்றும் 4ஆம் தேதிகளில் மீண்டும் சிறப்பு தீவிர முகாமை நடத்த இந்திய தேர்தல் கமிஷன் ஒரு கூடுதல் வாய்ப்பை வழங்கியுள்ளது என்று, தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பத்நாயக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.