தமிழகத்தில் உருவான குட்டி காஷ்மீர்.. ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
Nilgiris Frost : நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடும் உறைபனி நிலவி வருகிறது. இதனால், தொழிலாளர்கள், வேலைக்கு செல்வோர்கள் என பலதரப்பட்ட பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. குளிரிலிருந்து தற்காத்து கொள்ள நெருப்பு மூட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் உறைபனி பொழிவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை உறைபனி பொழிவு அதிகமாக இருக்கும். ஆண்டுதோறும், டிசம்பர் 15- ஆம் தேதிக்கு பிறகு உறை பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக முன்னதாகவே உறைபனி பொழிவு தொடங்கியுள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை உறை பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக, உதகை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மைதானங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை மீது வெள்ளைக் கம்பளம் போற்றியது போல காணப்பட்டு வருகிறது.
குட்டி காஷ்மீர் போல மாறிய நீலகிரி
இதில், குறிப்பாக சதுப்பு நிலங்கள், நீர் நிலைகளை ஒட்டி உள்ள இடங்களில் உறை பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதிகள் குட்டி காஷ்மீர் போல மாறி காட்சி அளித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் மற்றும் இந்த மாதம் தொடக்கத்தில் மழை பெய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் நீர் பணியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டில் முதல் உறைபனி பொழிவு முன்கூட்டியே தொடங்கி உள்ளது.
மேலும் படிக்க: ஒன்றல்ல..இரண்டல்ல.. 9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. விழுப்புரம் தலைமையாசிரியரின் வக்கிர செயல்!
பல்வேறு இடங்களில் வெள்ளை கம்பலம் போற்றயது போல…
இன்று ( வெள்ளிக்கிழமை ) காலை உதகமண்டலம் காந்தல் முக்கோணம், லவ்டேல், குதிரை பந்தய மைதானம், தலைக் குந்தா, அரசு தாவரவியல் பூங்கா, ஹெச். பி. எஃப். உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புல்வெளிகள், மைதானங்கள், மரம், செடி, கொடிகள், வாகனங்கள் உள்ளிட்டவை மீது வெள்ளைக் கம்பளம் போற்றியது போல உறை பனி படர்ந்து காணப்பட்டது. இதனால், கடும் குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும், கடும் குளிர் காரணமாக அதிகாலை நேரங்களில் தோட்டத் தொழிலாளர்கள், வேலைகளுக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வரும் பொதுமக்கள்
அவர்கள் குளிரில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உடலுக்கு கதகதப்பாக சூடேற்றிக் கொள்வதற்கு ஆங்காங்கே நெருப்புகள் மூட்டி தங்களை குளிரில் இருந்து பாதுகாத்து வருகின்றனர். இதனால், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். உதக மண்டலத்தில் இன்று வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: வீட்டில் அத்துமீறி நுழைந்து அரிவாள் வெட்டு.. ரத்த களறியான தூத்துக்குடி.. 5 சிறுவர்களை அலேக்காக தூக்கிய போலீஸ்!