தவெகவை திமுக வளரவிடாது: செல்லூர் ராஜூ குற்றச்ச்சாட்டு!
Sellur Raju alleges DMK: தவெகவுக்கு கூட்டணி அழைப்பு விடுத்து வரும் அதிமுக, அதற்காக அக்கட்சிக்கு எதிராக கூட கருத்து தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகிறது. சட்டமன்ற தேர்தலில் தவெக உடன் கூட்டணி அமைந்துவிட்டால் தங்களது பலத்தை உயர்த்திவிடலாம், ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கணக்கில் உள்ளனர்.
தவெகவை திமுக வளரவிடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டியுள்ளார். அதோடு, தவெகவிற்கு ஆதரவாகவும் அவர் பல்வேறு கருத்துகளை கூறியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம். கரூரில் கடந்த செப்.27ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அந்த சமயத்திலேயே விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலாக சம்பவ இடத்தில் இல்லாமல், சென்னை திரும்பியதாக விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்த அவர், அதனையும் நேரில் சந்தித்து கொடுக்காமல் வங்கிக் கணக்கில் செலுத்தி விமர்சனத்தை சந்தித்தார்.
இதையும் படிக்க : 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் – நயினார் நாகேந்திரன்..
இந்த துயரச் சம்பவம் நடந்து நாளையுடன் 30 நாள் ஆக உள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தற்போது வரை சந்திக்காத விஜய், நாளை அவர்களை சென்னைக்கு வரவழைத்து தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். இந்நிலையில், விஜய்யின் இந்த முடிவை பல்வேறு அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திப்பதை கூட தவிர்க்கும் அவர், அரசியலில் அடிப்படை புரிதல் கூட இல்லாமல் செயல்படுவதாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.




அதேசமயம் இவ்விவகாரம் தொடர்பாக பாஜகவும், அதிமுகவும் கருத்து தெரிவிக்காமல் இருந்து வருகின்றன. அது அவரது தனிப்பட்ட முடிவு அதில் தங்களுக்கு எந்த கருத்தும் இல்லை என்றே இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பதிலளித்து வருகின்றனர்.
அந்தவகையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், கரூர் கூட்டநெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களை சென்னை அழைத்து வந்து விஜய் சந்திப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தவெக தலைவரின் தனிப்பட்ட முடிவு குறித்து அதிமுக எந்தக் கருத்தும் கூற முடியாது என்றார். மேலும், தவெக ஒரு புதிய கட்சி, அந்த கட்சியை திமுக வளர விடாது என்று எச்சரித்த அவர், திமுகவை எதிர்க்க வேண்டிய கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்க : நெருங்கும் பீகார் சட்டமன்ற தேர்தல்.. பாஜகவிற்கு 101 இடங்கள்.. நிறைவடைந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..
தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசால் மதுரைக்கு புதிதாக ஒரு மேயரை தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றும் மதுரை மாநகராட்சிக்கு மேயர் இல்லாததால் நிர்வாகமே ஸ்தம்பித்துள்ளது என்றும் சாடினார். அதோடு, இந்த ஆட்சியில் அனைவரும் கரெப்ஷன், கமிஷன் என உள்ளதால் புதிய மேயரை தேர்ந்தெடுக்க முதல்வர் ஸ்டாலின் தயங்குகிறார் என்றும் இந்தியாவிலேயே மேயர், மண்டல தலைவர் இல்லாத மாநகராட்சி மதுரை தான் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.