விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது: ராஜேந்திர பாலாஜி
Rajendra Balaji invites vijay to AIADMK alliance: கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒருபகுதியாக தவெகவுக்கு தொடர் அழைப்பு விடுத்து வருகிறது. தவெக தங்கள் கூட்டணிக்கு வரும் பட்சத்தில் தங்களது பலம் பெருமளவில் உயர்ந்துவிடும் என்ற கணக்குடன் செயல்பட்டு வருகிறது.
சிவகாசி, அக்டோபர் 26: 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற, தவெகவை (TVK) எப்படியாவது தங்கள் கூட்டணிக்கு இழுத்துவிட வேண்டுமென்ற முடிவில் அதிமுக (ADMK) பிடிவாதமாக உள்ளது. எனினும், இவ்விவகாரத்தில் விஜய்யின் நிலைப்பாடு என்பது தற்போது வரை தெரியவில்லை. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் இரண்டாம் கட்ட தலைவர்கள் மூலம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், இருதரப்பிலும் இதனை யாரும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால், அதிமுக தலைவர்கள் அனைவரும் ஒரே மாதிரி விஜய் தங்கள் கூட்டணிக்கே வந்தாக வேண்டும் என்று வற்புறுத்தாத குறையாக அழைப்பு விடுத்து வருகின்றனர். அதோடு, பவன் கல்யாணை ஒப்பிட்டு, அவருக்கு துணை முதல்வர் பதவி தர தயாராக இருப்பது வரை அவர்கள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக கூட்டணிக்கு வந்தால் விஜய்க்கு நல்லது:
அந்தவகையில், சிவகாசியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஜய் ஒரு ஸ்டார் நடிகர், அவருக்கென தனி மாஸ் உள்ளது என்பதை மறுக்க முடியாது என்றார். அதோடு, அவரது நடவடிக்கைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது. எனினும், அவையெல்லாம் ஓட்டாக மாற வேண்டுமென்றால், அவருக்கு பயிற்சியுள்ள பயிற்சியாளர்கள் தேவை. அந்த பயிற்சியாளர்களாக அதிமுக நிர்வாகிகள் இருப்பார்கள் என்று உறுதி அளித்தார். மேலும், அவர் அதிமுக கூட்டணிக்கு வந்தால் விஜய்க்கு நல்லது. அவர் வராவிட்டாலும் அதிமுகவுக்கு எந்த கெடுதலும் கிடையாது. இதனால், அதிமுகவின் ஓட்டு சதவீதம் வேண்டுமானால் சற்று குறையலாமே தவிர, வெற்றியின் விளிம்பில் இருந்து அதிமுக ஒருபோதும் இறங்கி வராது என்றார்.




Also Read: விளம்பர வெளிச்சம்.. திமுக அரசை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்!
விஜய் வந்தால் 220 சீட், வரவில்லையென்றால் 180 சீட்:
2026ல் அதிமுக ஆட்சி தான் வரப்போகிறது. அவ்வாறு விஜய் கூட்டணிக்கு வந்தால் 220 சீட் அதிமுகவுக்கு தான் என்றும், வரவில்லையென்றால் 180 சீட் எனவும் அவர் சூளுரைத்தார். விஜய் அதிமுக கூட்டணிக்கு வருவது, அவரது எதிர்காலத்திற்கு நல்லது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும், திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டுமென்பதே மக்களின் கருத்தாக உள்ளது. அதோடு, அதிமுக, பாஜக, தவெக ஒன்றிணைய வேண்டுமென மக்கள் கிராமங்களில் கூட பேசிக்கொள்கிறார்கள். இந்த தேர்தலில் ஒன்றிணையுங்கள், அடுத்த தேர்தலில் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறும் அளவிற்கு திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் என்றார்.
Also read: இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து ஏமாற்றிய இளைஞர்.. இளம் பெண் பரபரப்பு புகார்!
கடந்த சட்டமன்ற தேர்தலில் 66 தொகுதிகளை கைப்பற்றிய அதிமுக, 2026 தேர்தலில் தோல்வியை தழுவினால் கூட 120 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று உறுதியுடன் உள்ளது. மேலும், அக்கட்சி தலைவர்களின் பேச்சின் மூலம் அவர்கள் மக்கள் மத்தியில் பலமாக இல்லாததை உணர்ந்துள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதோடு, அவர்கள் விஜய்யை கூட்டணிக்கு அழைப்பதும் தங்கள் மீதான நம்பிக்கையின்மையின் வெளிப்பாடே என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.