புதிய கட்சி தொடங்கும் சசிகலா?.. பிப்.24ல் வெளியாகும் அறிவிப்பு?.. அதிர்ச்சியில் அதிமுகவினர்!!
Sasikala to start a new political party: பிப்ரவரி 24ம் தேதி சசிகலா தனது புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் பசும்பொன்னில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, தனது புதிய கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, பிப்ரவரி 15: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா (V. K. Sasikala) புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட காலமாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த அவர், தற்போது மீண்டும் களம் காணத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி, அவர் கடந்த சில நாட்களாக அதிமுக, அமமுக நிர்வாகிகள் பலரை தனது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக, அமமுக நிர்வாகி ஜீவிதா நாச்சியாரை டிடிவி தினகரன் அக்கட்சியில் இருந்து நீக்கினார்.
இதையும் படிக்க: நெருங்கும் தேர்தல்.. மீண்டும் பரப்புரை சுற்றுப் பயணத்தை தொடங்கும் இபிஎஸ்.. தேதி அறிவிப்பு
ஆதரவாளர்களை சந்தித்து வரும் சசிகலா:
இதையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் சசிகலாவை சந்திக்க வந்த அவரது ஆதரவாளர்களுக்கு படிவம் ஒன்று வழங்கப்பட்டது. அதில் ஆதரவாளர் பெயர், அவர்களது விவரம் மற்றும் ஏற்கனவே உள்ள கட்சியில் வகித்த பதவிகளின் பொறுப்புகள் உள்ளிட்டவை இடம் பெற்று இருந்தது. சசிகலா தனது ஆதரவாளர்களின் கருத்துகளை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற சசிகலா, தொடர்ந்து முதலமைச்சராகவும் பதவி ஏற்க இருந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.
அதிமுக ஒன்றிணைய குரல் கொடுத்தவர்:
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறைக்குச் செல்லும் முன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அறிவித்து விட்டு சென்றார். அதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார். ஓ.பன்னீர்செல்வத்தையும் தன்னோடு இணைத்துக்கொண்டு அவரை துணை முதலமைச்சர் ஆக்கினார். சசிகலா 4 ஆண்டு சிறை வாசத்தை முடித்துவிட்டு வெளியே வரும்போது, அரசியல் நிலைமையே தலைகீழாக மாறிப்போய் இருந்தது. இதனால், அரசியலை விட்டு ஒதுங்கிய அவர், தனது ஆதரவாளர்களை மட்டும் அவ்வப்போது சந்தித்து பேசி வந்தார்.
இபிஎஸ் உடன் கைக்கோர்த்த டிடிவி தினகரன்:
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலா கூறிவந்தாலும் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. இதனிடையே, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து எடப்பாடி பழனிசாமியோடு கைகோர்த்து விட்டார். அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கூட, விஜய்யின் தவெகவில் இணைந்துவிட்டார். தற்போது அதிமுகவில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் மட்டுமே தனியாக நிற்கின்றனர். இதனால் தனிக்கட்சி தொடங்கும் முடிவிற்கு சசிகலா வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமமுகவில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலர் சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பிப்.24ல் புதிய கட்சி தொடங்கும் சசிகலா?
வருகிற பிப்ரவரி 24ம் தேதி சசிகலா தனது புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் பசும்பொன்னில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த முக்கிய நிகழ்வின் போது, தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கட்சியின் கொடியையும் அவர் அன்றே அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: விஜயுடன் கூட்டணி அமைக்கும் சசிகலா.. அறிவிப்பு எப்போது தெரியுமா? வெளியான தகவல்..
அதிர்ச்சியில் அதிமுகவினர்:
ஏற்கெனவே, அதிமுக பிளவுப்பட்டு உள்ள நிலையில், தற்போது சசிகலா தனது பங்கிற்கு ஒரு புதிய கட்சியை தொடங்க உள்ளது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க பசும்பொன் மண்ணில் இருந்து தனது அரசியல் பயணத்தை அவர் தொடங்க உள்ளதாக வரும் தகவல்கள் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது, வரும் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.