Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சேலத்தை அதிர வைத்த பெண்.. திண்டுக்கல் வியாபாரிடம் ரூ.10 கோடி மோசடி!

Dindigul Crime News: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மக்காச்சோள வியாபாரி ராஜ்குமாரிடம், சேலத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் சங்கீதா தம்பதியினர் ரூ.10 கோடி மோசடி செய்துள்ளனர். மக்காச்சோள ஏற்றுமதி மற்றும் மதிப்புக்கூட்டல் தொழில் எனப் பொய்யான வாக்குறுதி அளித்து மோசடி செய்துள்ளனர்.

சேலத்தை அதிர வைத்த பெண்.. திண்டுக்கல் வியாபாரிடம் ரூ.10 கோடி மோசடி!
சங்கீதா
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 10 Sep 2025 17:01 PM IST

திண்டுக்கல், செப்டம்பர் 10: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மக்காச்சோளம் வியாபாரியிடம் ரூபாய் 10 கோடி மோசடி செய்த சேலத்தை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 20 பேரை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் மக்காச்சோளத்தை விவசாயிகளிடம் நேரடியாக வாங்கி அதனை பிற தொழில் நிறுவனங்களுக்கு விற்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறார்.

சேலம் தம்பதியினரின் ஏமாற்று வேலை

இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் தொடர்பு ஏற்பட்டது. சரவணன் தனது மனைவி சங்கீதாவுடன் இணைந்து சேலத்தில் மக்காச்சோளத்தை மதிப்பு கூட்டல் செய்து கிராமத்து உணவு என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல்  வெளிநாடுகளுக்கு மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருவதாகவும் ராஜ்குமாரிடம் தெரிவித்துள்ளனர்.

Also Read:  பேஸ்புக் மூலம் பெண்ணுடன் பழக்கம்.. சென்னை தொழிலதிபரிடம் நகை கொள்ளை!

இதனை உண்மை என நம்பிய ராஜ்குமார் அவர்களுடன் வணிகம் செய்து வந்துள்ளார்.  இதனிடையே மக்காச்சோளம் கொள்முதல் கடந்த சில மாதங்களாக குறைந்ததால் சரவணன் நிறுவனத்திற்கு சொன்னபடி சரக்குகளை ராஜ்குமாரால் அனுப்ப முடியாமல் இருந்துள்ளது. இது தொடர்பாக பேசிய சரவணன், சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளத்தை நேரடியாக விவசாயம் செய்பவர்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளனர்.

நாங்கள்  அவர்களிடம் கொள்முதல் செய்யும் மக்காச்சோளங்களுக்கான பணத்தை அந்தந்த விவசாயிகளுக்கு நேரடியாக வங்கி கணக்கில் உங்கள் நிறுவனம் மூலம்  அனுப்பி விடுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தில் உங்களது கொள்முதல் பணத்துடன், கிடைத்த லாபத்தோடு சேர்த்து தருவதாக கூறியுள்ளார்.

சிக்கிய 20 பேர் கொண்ட கும்பல்

இதற்கு சம்மதித்த ராஜ்குமார் விவசாயின் வங்கி கணக்குகள் என சரவணன் அளித்த 19 பேருக்கு  ரூ.28 கோடி வரை பணம் அனுப்பினார். இந்த முதலீட்டை பல தவணைகளாகவும் ராஜ்குமார் திரும்பப்பெற்ற வந்துள்ளார். இந்த நிலையில் ரூ.10,73,67,960 பாக்கி இருந்துள்ளது.  இந்த பணத்தை பலமுறை திரும்ப கேட்டு சரவணன் கொடுக்காமல் ஏமாற்றுவதாக சொல்லப்படுகிறது.

சந்தேகத்தின் பேரில் நேரில் சென்ற ராஜ்குமாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் சரவணன் தரப்பில் கொடுத்த 19 பேரையும் வங்கி கணக்கு விவரங்கள் பற்றி விசாரித்துள்ளார்.  இதில் அந்த 19 பேரும் சரவணன் – சங்கீதா தம்பதியினரிடம் வேலை பார்க்கும் ஊழியர்கள் என தெரிய வந்தது. அவர்கள் மூலமாக மோசடி பணத்தை பெற்றுக்கொண்டு நன்றாக சொகுசாக வாழ்ந்து வந்துள்ளார்.

Also Read:  ஐபோன் மற்றும் மேக் பயனர்களை குறிவைத்து நடைபெறும் மோசடி.. வாட்ஸ்அப் எச்சரிக்கை!

அதை திரும்பத் தராமல் இழுத்தடித்ததும் தெரிய வந்தது.  இந்த மோசடி குறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் ராஜ்குமார் புகாரளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் சங்கீதாவை சேலத்தில் கைது செய்த நிலையில், திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நிலக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சரவணன் உள்ளிட்ட 20 பேரை  தேடி வருகின்றனர்.