பாமக எங்களுக்கே சொந்தம்…. உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு

PMK Leadership Dispute : பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி மீதான உரிமை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தன்னிடமே முழு உரிமை இருப்பதாக அறிவிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

பாமக எங்களுக்கே சொந்தம்.... உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு

அன்புமணி ராமதாஸ் - ராமதாஸ்

Published: 

19 Jan 2026 17:41 PM

 IST

சென்னை, ஜனவரி 19 : சென்னை உயர்நீதிமன்றத்தில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு (PMK)உரிமை கோரி, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் (Ramadoss) ஜனவரி 19, 2026 அன்று வழக்கு தாக்கல் செய்துள்ளார். பாமக தான் தொடங்கிய கட்சி என்றும், கட்சியின் முழு அதிகாரமும் தன்னிடமே உள்ளது என்றும் அறிவிக்கக் கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) ஆகியோருக்கிடையே கடந்த சில மாதங்களாக கடும் மோதல் நிலவி வருகிறது. இருவரும் கட்சி தங்களுக்கே என உரிமை கோருவதால், பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது. கட்சியில் இரு அணிகளாக பிரிந்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் இது அந்த கட்சிக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பாமக கட்சி உரிமை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு

கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், ராமதாஸ் பாமக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே கூட்டத்தில், அன்புமணியின் பதவிக்காலம் மே 29, 2025 அன்றுடன் முடிவடைந்ததாகவும், தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் ராமதாஸிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிக்க : நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. ஜன. 22ஆம் தேதி கையெழுத்தாகும் பாஜக – அதிமுக கூட்டணி ஒப்பந்தம்..

இந்நிலையில், தேர்தல் ஆணையம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணி தரப்புக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக ராமதாஸ் முதலில் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார். ஆனால், இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடருமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், பாமக கட்சி தன்னுடையது என்றும், கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்த முழு உரிமை தன்னிடமே இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கோரியுள்ளார். மேலும், அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாமகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும், தேர்தல் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரமும் தன்னிடமே இருக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இதற்காக சிவில் வழக்கும், ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : காங்கிரஸ் தலைமை பேச்சை மீறிய மாணிக்கம் தாகூர் எம்.பி.? மீண்டும் டிவிட்டரில் கருத்து பதிவு!

இதற்கிடையில், பாமக இரு அணிகளாகப் பிளவுபட்டு உள்ள நிலையில், அன்புமணி தலைமையிலான அணி வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவுடன் உடன் கூட்டணி அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், ராமதாஸ் அணியின் கூட்டணி நிலைப்பாடு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால், சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமக கொடி, சின்னம் மற்றும் கட்சி கட்டுப்பாடு தொடர்பான குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த வழக்குகள் இன்னும் ஒரு அல்லது இரண்டு நாட்களில் விசாரணைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பு, பாமகவின்ன் எதிர்கால அரசியல் பயணத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.

ஆதார் அட்டைதாரர்களே.. இந்தத் தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்.. அரசு எச்சரிக்கை!!
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!
"பாட்டி.. மொத்த சமோசாவும் காலி".. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..