அரசு ஊழியர்களை சொந்த பணிக்கு பயன்படுத்த தடை..புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் அதிரடி உத்தரவு!
Puducherry Governor Kailashnathan: புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சியாளர்கள் தங்களது சொந்த வேலைக்கு அரசு ஊழியர்களை பயன்படுத்தக் கூடாது என்றும், உடனடியாக அந்த ஊழியர்கள் பழைய பணியிடத்தில் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அந்த மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் கே. கைலாஸ்நாதன் தெரிவித்தார்.

அரசு ஊழியர்களை சொந்த பணிக்கு பயன்படுத்த தடை
புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சியாளர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட அரசு ஊழியர்களை சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் தங்களது சொந்த பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால், அந்த அரசு ஊழியர்கள் இருந்த இடத்தில் காலியிடம் ஏற்படுவதுடன், சக பணியாளர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுகிறது. மேலும், அரசு பணிகள் தடைபடுவதும், தாமதப்படுவதுமாக இருந்து வருகிறது. இதனால், பல்வேறு அரசு பணிகளில் தடை ஏற்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதனுக்கு புகார் சென்றது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட துணை நிலை ஆளுநர் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இது தொடர்பாக, நிர்வாக சீர்திருத்தத்துறை அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் மாஹே, ஏனாம், காரைக்கால் ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் புதுச்சேரி பிராந்தியத்தில் சேவை இடமாற்றம் செய்யப்பட்டிருந்தால், அவர்களுக்கான அந்த இடமாற்றம் ரத்து செய்யப்படுகிறது.
பழைய பணியிடத்தில் ஊழியர்கள் நியமிக்க வேண்டும்
இதனால், அந்த அரசு ஊழியர்கள் புதுச்சேரியில் இருந்து தாங்கள் முன்பாக பணி செய்து வந்த இடத்துக்கு மாறி செல்ல வேண்டும். அவர்கள், பழைய பணி இடத்தில் பணியமர்த்தப்பட வேண்டும். இதில், அவசர தேவைக்காக எந்த அரசு ஊழியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தால், அது தொடர்பாக துணைநிலை ஆளுநர் கே. கைலாஸ்நாதனிடம் கட்டாய அனுமதி பெற வேண்டும். எனவே, இந்த உத்தரவை நிர்வாக துறை தலைவர்கள் மற்றும் நிர்வாக செயலாளர் ஆகியோர் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
மேலும் படிக்க: பொங்கல் பரிசு தொகுப்பு-ரூ.3 ஆயிரம் ரொக்கம்..பெற விரும்பாத 6 லட்சம் பேர்..என்ன காரணம்!
உத்தரவை அரசு அதிகாரிகள் மீறக் கூடாது
இந்த உத்தரவை மீறினாலோ அல்லது தவறினாலோ மிக தீவிரமாக கருதப்படும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பல ஆண்டுகளாக சர்வீஸ் பிலைஸ்மெண்ட் என்ற முறை செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதனால், அமைச்சர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் தங்களது சொந்தப் பணிகளுக்காக விருப்பப்பட்ட அரசு ஊழியர்களை தங்களுடன் வைத்துக் கொள்கின்றனர். இதனால், அவர்களுக்கான பணியிடம் வெற்றிடமாக இருப்பதுடன், அவர்களுக்கான பணிகள் பாதிப்படைகிறது.
ஊழியர்கள் மத்தியில் பணிச்சுமை அதிகரிப்பு
இது சாதாரண பொது மக்கள் முதல் அரசு உயர் அதிகாரிகள் வரை இடர்பாடை ஏற்படுத்தி வருவதாகவும், பணிச் சுமையை அதிகரித்து வருவதாக புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் துணை நிலை ஆளுநரின் கவனத்திற்கு சென்ற நிலையில், இது தொடர்பாக அவர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் படி, சர்வீஸ் பிளேஸ்மென்ட்டில் உள்ள அரசு ஊழியர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு, அவர்களது பழைய பணியிடத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.
மேலும் படிக்க: தவெக 3-ஆம் ஆண்டு தொடக்க விழா..பனையூரில் பிரம்மாண்டமாக நடக்கிறது…விஜய் கொடியேற்றுகிறார்!