குற்றவாளிகளை பிடிக்க தாமதமானது ஏன்? காவல் ஆணையர் விளக்கம்

Coimbatore College Student Assault Case: கோயம்புத்தூர் விமான நிலையம் அருகே தன் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்தது எப்படி என்பது குறித்து காவல்துறையினர் விளக்கமளித்துள்ளார்.

குற்றவாளிகளை பிடிக்க தாமதமானது ஏன்? காவல் ஆணையர் விளக்கம்

காவல் ஆணையர் சரவண சுந்தர்

Updated On: 

04 Nov 2025 17:20 PM

 IST

கோயம்புத்தூர், நவம்பர் 4 :  கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கில், தீவிர வேட்டைக்குப் பிறகு, மூன்று குற்றவாளிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குணா, கருப்பசாமி மற்றும் கார்த்திக் என்கிற களீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  இந்த 3 பேரில் இருவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு பதிவாகியிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஒரு காவலரின் கையில்  காயமடைந்ததாகவும் அவர் தற்போது கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

குற்றவாளிகளை கைது செய்தது எப்படி?

இது தொடர்பாக கோவை நகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறியதாவது, “குற்றவாளிகள் மேட்டுப்பாளையம் அருகே இருப்பது தெரியவந்தது. அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பிக்க முயன்றனர். அதனால் காவல்துறையினர் அவர்களை பிடிக்கும் முயற்சியில், துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூவரும் கால் பகுதியில் காயமடைந்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்,”என்றார்.

இதையும் படிக்க : மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தல்..

மேலும் பேசிய அவர், குற்றவாளிகள் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில், சிறையிலிருந்து 30 நாட்களுக்கு முன் ஜாமீனில் வந்த நிலையில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு அருகே, உள்ள பகுதிகளில் 300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யப்பட்டது. ரகசியமாக கிடைத்த தகவல் ஒன்றும் குற்றவாளிகளை கைது செய்ய உதவியது. மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களில் இருவர் உடன் பிறந்த சகோதரர்கள்.

இந்த நிலையில் 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 2, 2025  இரவு 11.20 மணிக்கு அவசர உதவி எண்ணுக்கு புகார் வந்தது. இரவு 11:35 மணிக்கு சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெற்ற இடத்திற்கு இரவு 11:35 மணிக்கு சென்று 5 மணி நேரம் தேடியும் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதிகாலை 4 மணிக்கு தானாகவே மாணவி எழுந்து வந்த நிலையில் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிக்க : கோவையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. பெண்கள் பாதுகாப்பை குழித்தோண்டி புதைத்த திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..

அரிவாள் வெடுக்கு பயந்து போலீசார் திரும்பியதால் தான் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்க 5 மணி நேரம் ஆனது என வெளியான தகவல் தவறு. மிகவும் இருள் சூழ்ந்த இடம், பெரிய சுவர் இருந்த காரணத்தினால் தேடுதல் பணியில் பின்னடைவு என காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கமளித்தார்.

சம்பவம் எப்படி நடந்தது?

கல்லூரி முதுநிலை படிக்கும் மாணவி ஒருவர் கடந்த நவம்பர் 2, 2025 அன்று இரவு 11 மணியளவில் ஒரு ஆண் நண்பருடன் விமான நிலையம் அருகே காரில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த இடத்துக்கு மூன்று பேர் வந்து காரின் கண்ணாடியை உடைத்து தாக்கியுள்ளனர். பின்னர் ஆண் நண்பரை தாக்கிய அவர்கள், அந்த பெண்ணை வற்புறுத்தி அழைத்து சென்றுள்ளனர்.  பின்னர், அதிகாலை 4.30 மணியளவில் அந்த மாணவி கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.