10 நாள் பழக்கம்.. கோவை அரசு மருத்துவமனையில் இளைஞர் கொலை!
Coimbatore Crime News: கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் விஜய், பழிவாங்கும் நோக்கில் விக்னேஷ் என்பவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதம், அவதூறு காரணமாக இந்த கொலை நிகழ்ந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர், அக்டோபர் 19: கோயம்புத்தூர் மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் ஒருவர் பழிவாங்கும் நோக்கி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் திருப்பூர் மாவட்டத்தில்ஜவுளி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியான ரஞ்சனா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு விஜய் ரஞ்சனாவை அழைத்துக் கொண்டு பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அங்கு சில சிக்கல்கள் எழுந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு தனது மனைவியை அழைத்து சென்ற விஜய் அங்கு சிகிச்சைக்காக மகப்பேறு வார்டில் அனுமதித்தார். இதே வார்டில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது மனைவி கீர்த்திகாவை பிரசவத்திற்கு அனுமதித்திருந்தார். விக்னேஷிற்கும் விஜய்க்கும் இடையே மருத்துவமனையில் வைத்து பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் உதவிகளை செய்து வந்துள்ளனர். விக்னேஷ் சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிகோனாம்பாளையத்தை சேர்ந்தவர். கட்டுமான தொழிலாளியாக உள்ளார்.
Also Read: நஷ்ட ஈடு பிரச்னை.. அண்ணனுக்கு பதில் தம்பி கொலை
இந்த நிலையில் மருத்துவமனை பழக்கம் இருவரும் ஒருநாள் மது அருந்தும் நிலைக்கு சென்றுள்ளது. அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது. இதில் விக்னேஷை விஜய் தகாத வார்த்தையால் திட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும் தாக்கியதால் கோபமடைந்த விக்னேஷ் பழிவாங்கும் நோக்கத்துடன் காத்திருந்தார்.
இந்த நிலையில் விக்னேஷின் மனைவிக்கு குழந்தை பிறந்து அவர்கள் வீடு திரும்பினர். ஆனால் விஜய் தனது மனைவி ரஞ்சனாவுடன் மருத்துவமனையில் இருந்தார். இந்த நிலையில் விஜய் மீதான ஆத்திரம் தீராத விக்னேஷ் நேற்று முன்தினம் (அக்டோபர் 17) இரவு மருத்துவமனை வளாகத்திற்கு வந்துள்ளார். அங்கு விஜயை சந்தித்த அவர் தனியாக சென்று பேச வேண்டும் என அழைத்துள்ளார்.
Also Read: மந்திரவாதியுடன் கள்ளக்காதல்.. காதலனுடன் திட்டமிட்டு கணவனை கொலை செய்த மனைவி!
அங்கு சென்றவுடன் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரமடைந்த விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜய் மார்பில் குத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத விஜய் வலியால் அலறி துடித்தார். மேலும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது சத்தம் கேட்டு மருத்துவமனை வளாகத்தில் இருந்த மக்கள் அங்கு ஓடி வந்தனர். இதனைக் கண்டு விக்னேஷ் தப்பியோட முயன்ற போது பொதுமக்கள் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும், முழுமையான சோதனைக்கு பிறகு பொதுமக்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.