Crime: கோயில் பூசாரி வெட்டிக் கொலை.. திருச்செந்தூரில் அதிர்ச்சி சம்பவம்!
தூத்துக்குடி ஆறுமுகநேரி கோயில் பூசாரி முருகேசன் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் வளாகத்திலேயே சடலமாக மீட்கப்பட்ட முருகேசனின் மரணம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரிக்கின்றனர். 2023 கோயில் கொடை விழா தகராறே இக்கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி, அக்டோபர் 15: தூத்துக்குடி மாவட்டத்தில் கோயில் பூசாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஆறுமுகநேரி காவல்துறை சோதனை சாவடி அருகே சாலை ஓரத்தில் உள்ள சுடலைமாட சுவாமி கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதனிடையே நேற்று செவ்வாய்கிழமை என்பதால் (அக்டோபர் 13) வழக்கம் போல முருகேசன் காலையில் கோயிலுக்கு பூஜை செய்ய வந்துள்ளார். அப்போது ஆறுமுகநேரி பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
எனவே வீட்டுக்கு செல்லாமல் கோயிலில் இருக்கும் மரத்தடி நிழலில் ஓய்வு எடுத்துள்ளார். இந்த நிலையில் மதியம் 3 மணியளவில் தனது மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு குடிக்க தண்ணீர் வேண்டும், அதனை கொண்டு வருமாறு முருகேசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 4 பிள்ளைகளுடன் தற்கொலை செய்துக்கொண்ட தாய்.. அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு.. பகீர் சம்பவம்!
இதனை தொடர்ந்து மனைவி தண்ணீருடன் கோயிலுக்கு சென்ற நிலையில் அங்கு ஓரிடத்தில் முருகேசன் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகேசன் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளிகளை கண்டறிந்து வருகின்றனர்.
முதற்கட்டமாக பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீசார் விசாரணையில் கடந்த 2023 ஆம் ஆண்டு சுடலை மாடசுவாமி கோயிலில் கொடை விழா நடத்தப்பட்டுள்ளது. அப்போது முருகேசனுக்கும், பெருமாள்புரத்தைச் சேர்ந்த இன்னொரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: மனைவியின் தங்கையை 2வது மனைவியாக்க தீரா ஆசை.. 2 கொலைகளில் முடிந்தது எப்படி?
இதனால் முன்விரதம் இருந்து வந்ததால் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் யூகித்துள்ளனர். மேலும் இரு தரப்புக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற வேண்டிய கோயில் கொடை விழா நடக்கவில்லை என்பதால் ஆத்திரத்தில் இருந்த எதிர் தரப்பு முருகேசனை கொலை செய்திருக்கிறதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.