தேர்வு வினாத்தாள் கசிவுக்கு கடும் தண்டனை… புதிய சட்ட மசோதாவை வரவேற்று பிரதமர் மோடி வீடியோ வெளியீடு!
கேள்வித்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரிக்க அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் அமர்வு நீதிமன்றங்களை சிறப்பு விரைவு நீதிமன்றங்களாக அறிவிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் வழக்குகளை முடிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 31, 2026: தேர்வுக் வினாத்தாள் கசிவைத் தடுக்கவும், தேர்வு முறையை மேலும் நம்பகத்தன்மையுடன் மாற்றவும் கொண்டு வரப்பட்டுள்ள பொது தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா–2026 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் கல்வி முறை மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நான்காவது முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த மசோதா தேர்வு முறையை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆண்டி பேப்பர் லீக் மசோதாவை வரவேற்று வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி:
View this post on Instagram
இந்த மசோதா, வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிப்பதுடன், இதுபோன்ற வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் வகையிலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த மசோதா புதன்கிழமை மக்களவையிலும், வியாழக்கிழமை மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
நேற்று இரவு வெளியிட்ட வீடியோவில் பிரதமர் மோடி கூறியதாவது: “கடந்த பல தசாப்தங்களாக மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் கேள்வித்தாள் கசிவு பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எனவே கல்வி முறையில் சீர்திருத்தம் அவசியமாகியுள்ளது. தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நாட்டின் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் கேள்வித்தாள் கசிவு கும்பல்கள், தேர்வு மாஃபியாக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகவே கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நான் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது:
நான் அளித்த வாக்குறுதியின்படி இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக இரு அவைகளிலும் விரிவான விவாதங்கள் நடைபெற்றன. தற்போது இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நம்பகமான தேர்வு முறையை உருவாக்குவதில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறும். இத்தகைய சூழ்நிலைகள் நீண்ட காலம் நீடிக்க அனுமதிக்க மாட்டோம். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா சொல்வது என்ன?
புதிய சட்டத் திருத்தத்தின்படி, கேள்வித்தாள் கசிவு அல்லது தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். அமைப்புசார்ந்த குற்றங்களில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 கோடிக்கும் குறையாத அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் படிக்க: வந்தே மாதரம்’ மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் – கனிமொழி எதிர்ப்பு
மேலும், கேள்வித்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரிக்க அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் அமர்வு நீதிமன்றங்களை சிறப்பு விரைவு நீதிமன்றங்களாக அறிவிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் வழக்குகளை முடிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் 4 வீடியோக்களை வெளியிட்ட பிரதமர் மோடி:
கடந்த ஜூலை 23ஆம் தேதி வெளியிட்ட முதல் இன்ஸ்டாகிராம் வீடியோவில், கேள்வித்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கடுமையான நடவடிக்கைகளுக்காக புதிய சட்ட மசோதா கொண்டு வரப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜூலை 24ஆம் தேதி, தனது பதிவுக்கு இளைஞர்கள் வழங்கிய பயனுள்ள ஆலோசனைகளுக்கு நன்றி தெரிவித்து, அவர்களுடனான தனது உறவு மேலும் வலுப்பெறும் என்று கூறினார்.
மேலும் படிக்க: வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பு – பிரதமர் மோடி முக்கிய உத்தரவு
ஜூலை 26ஆம் தேதி வெளியிட்ட மற்றொரு வீடியோவில், இந்தியாவின் தேர்வு முறையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கும் வகையில், இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அறிவித்தார்.