நாளை இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Heavy Rain Alert : வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுநிலை, காற்றழுத்தமாக வலுப்பெற்றுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தின் சில பகுதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, ஜனவரி 8 : தமிழக சில நாட்களாக இயல்பான வானிலை நிலவி வந்த நிலையில், தற்போது மீண்டும் கனமழைக்கான (Heavy Rain)எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஜனவரி 9, 2026 நாளை ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஜனவரி 7, 2026 அன்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து ஜனவரி 8, 2026 காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது இலங்கையின் ஹம்பாந்தோட்டை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 410 கிலோமீட்டர், பட்டிக்கலோவாவிற்கு 420 கிலோமீட்டர், திருகோணமலைக்கு 520 கிலோமீட்டர், காரைக்காலுக்கு 810 கிலோமீட்டர் மற்றும் சென்னைக்கு தென்கிழக்கில் 980 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த 36 மணி நேரங்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஜனவரி 9. 2026 மாலை அல்லது இரவு நேரத்தில் இலங்கையின் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை இடையே கடற்கரையை கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருள்களும் இங்கு வாங்கலாம்…கோயம்பேட்டில் சிறப்பு சந்தை!




இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
இதன் தாக்கம் காரணமாக ஜனவரி 8, 2026 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் ஒரு அல்லது இரண்டு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், உள்மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 9, 2026 நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் பல இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு அல்லது இரண்டு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜனவரி 10, 2026 அன்று சனிக்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலன் கடலோர பகுதிகளில் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : பணிக்கு வராமல் போராட்டம்.. ஆசிரியர்களுக்கு சம்பளம் ‘கட்’.. அரசு அதிரடி உத்தரவு!!
மேலும், இன்று மற்றும் நாளை இரவு அல்லது அதிகாலை நேரங்களில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 29 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.