வார இறுதி நாட்கள், மொஹரம் பண்டிகை.. 1,829 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..
வியாழக்கிழமை பயணத்திற்காக 12,445 பேரும், வெள்ளிக்கிழமைக்கு 5,846 பேரும், சனிக்கிழமைக்கு 3,815 பேரும், ஞாயிற்றுக்கிழமைக்கு 12,642 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் TNSTC Official Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஜூன் 23, 2026: தொடர் விடுமுறை, மொஹரம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 1,829 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த மாதமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
25ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள்:
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “25.06.2026 (வியாழக்கிழமை), 26.06.2026 (மொஹரம் பண்டிகை – வெள்ளிக்கிழமை), 27.06.2026 (சனிக்கிழமை) மற்றும் 28.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு, 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்தும், பிற முக்கிய நகரங்களிலிருந்தும் தமிழகம் முழுவதும் அதிகளவிலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: அனைத்திலும் 6 மாதம் அவகாசம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு… முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்!
இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளன.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 25.06.2026 அன்று 525 சிறப்பு பேருந்துகளும், 26.06.2026 மற்றும் 27.06.2026 ஆகிய நாட்களில் தலா 315 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
1,829 சிறப்பு பேருந்துகள் இயக்கம்:
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 25.06.2026 அன்று 85 பேருந்துகளும், 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தலா 75 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
மேலும், மாதவரத்திலிருந்து 25.06.2026 மற்றும் 27.06.2026 ஆகிய நாட்களில் தலா 14 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதேபோல், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக 28.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
32 ஆயிரம் பேர் முன்பதிவு:
இந்நிலையில், வியாழக்கிழமை பயணத்திற்காக 12,445 பேரும், வெள்ளிக்கிழமைக்கு 5,846 பேரும், சனிக்கிழமைக்கு 3,815 பேரும், ஞாயிற்றுக்கிழமைக்கு 12,642 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் TNSTC Official Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதிகளை பயன்படுத்தி தங்களது பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.