Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“நீலகிரி குயின்” மலை ரயில் நீராவி என்ஜின்…புதுப்பொலிவுடன் சோதனை ஓட்டம்!

Nilagiri Mountain Rail: மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரயிலின் நீராவி என்ஜின் பொலிவு படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டதை அடுத்து, அந்த ரயில் என்ஜினுக்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

“நீலகிரி குயின்” மலை ரயில் நீராவி என்ஜின்…புதுப்பொலிவுடன் சோதனை ஓட்டம்!
நீலகரி மலை ரயில் நீராவி என்ஜின் சோதனை ஓட்டம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 24 Jan 2026 08:25 AM IST

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பது அந்தப் பகுதியில் இயக்கப்படும் மலை ரயில் பயணமாகும். இந்த ரயிலானது கடந்த 1899- ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. முந்தைய காலத்தில் நிலக்கரி மூலம் இந்த ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதனால், அப்போது சுற்றுச்சூழல் மாசுபாடு பெருமளவில் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த 2002 ஆம் ஆண்டு, இந்த ரயிலின் என்ஜின் பர்னல் ஆயில் மூலமாக இயங்கக்கூடிய என்ஜின் ஆக மாற்றி வடிவமைக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, தற்போது, இந்த மலை ரயில் நீராவி என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலானது நீலகிரியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் குகைகள் வழியாக சென்று வருகிறது. இதில், செல்வது மிகப்பெரிய சுற்றுலா அனுபவத்தை தரும் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த சேவையை விரும்பி வருகின்றனர்.

நீலகிரி குயின் மலை ரயில் நீராவி என்ஜின் பராமரிப்பு

இந்த நிலையில், நீலகிரி குயின் என்று அழைக்கப்படும் இந்த மலை ரயிலில் உள்ள எக்ஸ் கிளாஸ் நீராவி என்ஜின்கள் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலை ரயில்கள் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும். அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலை ரயிலின் நீராவி என்ஜின் திருச்சி, பொன்மலை பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பொலிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

மேலும் படிக்க: மகாபலிபுரம்-கொடைக்கானலில் விரைவில் ரோப் கார் சேவை…சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் பலே திட்டம்!

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நீராவி என்ஜின் சோதனை ஓட்டம்

தற்போது, அந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து, அந்த மலை ரயிலின் எக்ஸ் கிளாஸ் என்ஜின் ராட்சத லாரி மூலம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, ராட்சத கிரேன்கள் மூலம் லாரியிலிருந்து இறக்கப்பட்டு ரயில் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மலை ரயில் சோதனை ஓட்டமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இயக்கப்பட்டது. காலை 9:30 மணிக்கு புறப்பட்ட இந்த மலை ரயில் பிற்பகல் 1:30 மணிக்கு குன்னூர் வந்தடைந்தது. இந்த என்ஜினை விரைவில் இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பயணிகள் விரைவில் பயணம் செய்யலாம்

நீலகிரி மற்றும் கோயம்புத்தூருக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலை ரயில் பயணத்தை பெரிதும் விரும்புவார்கள். இதனால் இந்த மலை ரயிலுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. தற்போது, பராமரிப்பு பணிக்காக திருச்சி கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்த பணிகள் முடிந்து மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு ரயில் என்ஜின் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயிலில் பொதுமக்கள் விரைவில் பயணம் மேற்கொள்ளலாம்.

மேலும் படிக்க:தாம்பரம்-திருவனந்தபுரம் அம்ரித் பாரத் ரயில் புறப்படும் நேரம்…தெற்கு ரயில்வே அறிவிப்பு!