மகாபலிபுரம்-கொடைக்கானலில் விரைவில் ரோப் கார் சேவை…சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் பலே திட்டம்!
Rope Car Service: தமிழகத்தில் மகாபலிபுரம், கொடைக்கானல், உதகை ஆகிய 3 இடங்களில் விரைவில் ரோப் கார் சேவை கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகாபலிபுரமும் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு, பல்லவர் மன்னர் கால கடற்கரை கோவில், குடைவரைக் கோயில்கள், மண்டபங்கள், 5 ரதங்கள், அர்ஜுனன் தபசு,சிற்பங்கள் மற்றும் சிலைகள் உள்ளிட்ட ஏராளமான பாரம்பரியங்கள் உள்ளன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றி பார்ப்பதற்காக வந்து செல்கின்றனர். இதில், உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும் தினம்தோறும் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும், இங்கு உள்ள பகுதிகளை சுற்றி பார்ப்பதற்காகவும் ரோப் கார் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை-மதுரையில் மெட்ரோ ரயில் சேவை
தமிழகத்தில் சென்னையை போல கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல, கொடைக்கானல் மற்றும் மகாபலிபுரத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த பகுதிகளில் உள்ள சில இடங்களில் மெட்ரோ ரயிலுக்கான பில்லர்கள் அமைப்பதற்கு போதிய சாத்திய கூறுகள் இல்லாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் கோவிலை தொல்லியல் துறைக்கு மாற்ற வழக்கு – உச்சநீதிமன்றம் உத்தரவு




3 இடங்களில் ரோப் கார் சேவை
இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்காக ரோப் கார் சேவையை தொடங்குவதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக தனியார் நிறுவனத்துடன், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.
உதகையில் ரோப் கார் சேவைக்கு ஒப்பந்தம்
முதலில் நீலகிரி மாவட்டம், உதகையில் ரோப் கார் சேவையை கொண்டு வருவதற்காக தனியார் நிறுவனத்துடன், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக அந்த தனியார் நிறுவனம் ஆய்வு செய்து, 3 மாதங்களில் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இதை தொடர்ந்து, ரோப் கார் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
மகாபலிபுரம்-கொடைக்கானலில் விரைவில் ரோப் கார் சேவை
இதைத் தொடர்ந்து, மகாபலிபுரம் மற்றும் கொடைக்கானலில் ரோப் கார் சேவையை கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில், ரோப் கார் சேவை திட்டம் அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில், வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க: ஜல்லிக்கட்டு போட்டி விதிமுறைகளில் சில தளர்வுகள்…என்ன அது…வீரர்கள் மகிழ்ச்சி!