ஜல்லிக்கட்டு போட்டி விதிமுறைகளில் சில தளர்வுகள்…என்ன அது…வீரர்கள் மகிழ்ச்சி!
Jallikattu Competitions: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதில் உள்ள சில விதிகளில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இது, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துபவர்கள் மற்றும் மாடு பிடி விீரர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அது என்ன தளர்வுகள் என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அலங்காநல்லூரில் நடைபெற்ற போட்டியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்தார். அப்போது, இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெறும் வீரருக்கு கால்நடை பராமரிப்பு துறையில் அரசு பணியிடம் வழங்கப்படும் என்றும், கார் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். இதே போல, அலங்காநல்லூரில் ரூ.2 கோடியில் உலகப் புகழ்பெற்ற தமிழகத்தின் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதில் சில இடையூறுகள் இருப்பதாக தமிழக அரசின் கவனத்திற்கு சென்றது.
மேலும் படிக்க: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் – ரயில் சேவைகளில் முக்கிய மாற்றம்
ஜல்லிக்கட்டு போட்டியில் விதிமுறைகளில் தளர்வு
அதன் பேரில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் உள்ள சில சிரமங்களை தளர்த்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.




- ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊரில் உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் ஆன்லைன் பதிவு முறையில் மாற்றம் செய்யப்பட்டு அந்தந்த மாவட்ட அளவில் முடிவு செய்வதற்கான வழிவகை செய்யப்பட உள்ளது.
- இதே போல, ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது மாடுபிடி வீரர்கள் உயிரிழந்தால், அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், மாடுபிடி வீரர்களுக்கு ஆயுள் காப்பீடு என்பது கட்டாயம் என்ற விதியில் தளர்வு செய்யப்படுகிறது.
- ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துபவர்களிடம் முத்திரைத்தாளில் உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த நடைமுறையும் வருங்காலங்களில் ரத்து செய்யப்பட உள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் வகையில்
இந்த நடைமுறைகள் அனைத்தும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு எவ்வித துன்பமும் நேராத வகையிலும், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எந்த விதமான இடையூறும் இல்லாத வகையிலும் இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், தமிழகத்தின் பாரம்பரியத்தை பேணி காப்பதிலும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையிலும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், தமிழக அரசு தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கமாகும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு என பல்வேறு பாரம்பரியங்கள் உள்ளன. இந்த போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் ஆகியவற்றுக்கு ஜல்லிக்கட்டு போட்டிக்கான விதிமுறைகள் கடுமையாக விதிக்கப்பட்டிருந்தன. தற்போது, அந்த விதிமுறைகளில் தமிழக அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது வரவேற்கும் விதமாக உள்ளது. இதனால், ஜல்லிக்கட்டு போட்டியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கெல்லாம் தெரியுமா?