“முதல்வர் விஜய் பேசுவது கடும் அதிர்ச்சியை தருகிறது!”.. மேடை மோட்டிவேஷன் பேச்சை நிறுத்துங்கள்.. நயினார் நாகேந்திரன் ஆவேசம்!!
Nainar Nagendran condemns CM Vijay: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்து முல்வர் விஜய் பேசிய விதம் கடும் அதிர்ச்சியை அளிப்பதாகக் கூறியுள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தனிப்பட்ட நபராகப் பேசுவதற்கும் பொறுப்பான பதவியில் இருந்து பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது என்று கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
சென்னை, நவ.06: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் அரசியல் சூழலில், அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்களும் பொது மேடைகளில் அவர்கள் வைக்கும் விமர்சனங்களும் மாநில அரசியலில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், அண்மையில் நடைபெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் ஆற்றிய உரைகள் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன. குறிப்பாக, சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாகத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க: குதிரை பேர புகார்.. முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் கைது.. தவெக அரசின் ஏவல்துறைக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..
பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் பேசும் முறை:
தவெக அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க மாணவர்களுக்கு இலவச உபதேசமா திரு. @TVKVijayHQ அவர்களே?
சென்னையில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரு. @TVKVijayHQ அவர்கள் ‘போதைப்பொருள், ஊழல் பக்கம் போயிடாதீங்க… கொஞ்சம் ஃபன், என்ஜாய்மெண்ட் ஓகே… பட் அடிமையாகாதீங்க’ என கேஷுவலாகப் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் முதல்வர் என்கிற பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு மாணவர்களிடம் இப்படியா பேசுவது? ஒருவர் தனிப்பட்ட முறையில் பேசுவதென்பது வேறு, ஒரு பொறுப்பான முதல்வர் பேசுவதென்பது வேறு. திரு. ஜோசப் விஜய் அவர்கள் இது போன்ற ஒரு அறிவுரையை தனது வாரிசுகளுக்கு வழங்குவாரா? இது சினிமா ஷூட்டிங்கோ அல்லது ஆடியோ லான்ச் மேடையோ அல்ல திரு. ஜோசப் விஜய் அவர்களே; ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம்!
காவல்துறையை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு போதை மாஃபியாக்களையும், ஊழல் திமிங்கலங்களையும் சிறையில் தள்ள வேண்டிய நீங்கள், மேடைகளில் அமர்ந்து ‘மோட்டிவேஷன் ஸ்பீக்கர்’ போலப் பஞ்ச் டயலாக் பேசுவது உங்கள் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. ‘தவறுக்கு அடிமையாகாதீர்கள்’ என்று குழந்தைகளுக்கு உபதேசம் செய்வது மட்டும் முதல்வரின் வேலை கிடையாது; இளைஞர்களைச் சீரழிக்கும் போதைக் கும்பலை வேரோடு அழிப்பது உங்கள் பிரதானக் கடமை.
Gen Z இளைஞர்களிடம் ‘Cool CM’ எனப் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, போதைப்பொருள் ஒழிப்பு போன்ற தீவிரமான விவகாரத்தைக்கூட ‘Vibe & Chill’ மனப்பான்மையோடு அணுகுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் பி.ஆர் (PR) விளம்பரங்களுக்காகத் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்வைப் பணயம் வைக்காதீர்கள். துணிச்சலிருந்தால் போதை மாஃபியாக்கள் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சுங்கள்! இல்லையெனில், உங்கள் போலியான ‘Vibe’ அரசியலைத் தூக்கியெறிந்து, உங்களை ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்க இந்த Gen Z தலைமுறையே முன்னிற்கும் என எச்சரிக்கிறேன்!
— Nainar Nagenthran (@NainarBJP) November 6, 2026
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜய்யின் சமீபத்துப் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். தனிப்பட்ட நபர் ஒருவர் பொதுவெளியில் பேசுவதற்கும், பொறுப்பான பதவியில் உள்ள ஒருவர் பேசுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். இது சினிமா பட வெளியீட்டு விழாவோ அல்லது திரைப்படத்தின் இசை வெளியீட்டு மேடையோ அல்ல என்பதை முதல்வர் விஜய் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளைக் கையாளும் போது மிகவும் பொறுப்புடன் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.
குற்றவாளிகள் மீதான அதிரடி நடவடிக்கை:
தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் தலைதூக்கி வரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கடுமையாகச் சாடினார். தங்களுக்குத் துணிச்சல் இருந்தால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைச் சீரழிக்கும் போதை மாஃபியாக்கள் மற்றும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சி அவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காவல்துறை தனது முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறிக் கொள்ளும் நபர்கள், போதை ஊடுருவல்களைத் தடுத்து நிறுத்தாமல் வெறும் மேடைப் பேச்சுகளிலும் மோட்டிவேஷன் உரைகளிலும் மட்டுமே கவனம் செலுத்துவது நிர்வாகத் தோல்வியையே வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிக்க: புதிய திரைப்படங்களுக்கு 6 மணி காட்சிகளுக்கு அனுமதியா?.. பொதுமக்களின் பாதுகாப்பை பணையம் வைப்பதா?.. தமிழக அரசுக்கு திமுக கடும் கண்டனம்!
நிர்வாகத் தோல்வியும் அரசியல் நகர்வுகளும்:
முதல்வர் விஜய்யின் உரைகள் மக்களைக் கவரும் வகையில் மேடைகளில் பேசப்படும் ‘பஞ்ச் டயலாக்குகளாகவும்’ மேடை மோட்டிவேஷன் பேச்சுகளாகவுமே இருக்கின்றனவே தவிர, நடைமுறைச் சிக்கல்களுக்குரிய தீர்வுகளை முன்வைப்பதாக இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய மாநில அரசு மற்றும் அரசியல் கட்சிகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இத்தகைய அரசியல் மோதல்களும் கருத்துப் போர்களும் தமிழக அரசியலில் அடுத்தடுத்த கட்ட நகர்வுகளை மிகவும் பரபரப்பானதாக மாற்றி வருகின்றன.