குதிரை பேர புகார்.. முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் கைது.. தவெக அரசின் ஏவல்துறைக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..
Edappadi Palaniswami Slams TVK Government: பாதிக்கப்பட்டவன் மீதே பழியை சுமத்தி குற்றவாளி பட்டம் கட்டும் பழைய தமிழ் சினிமா பார்முலா-வை அஇஅதிமுக மீது திணிக்கப் பார்க்கும் இந்த சினிமா ரீல்ஸ் அரசுக்கு, அதே கதையின் இறுதியில் எல்லா சாயமும் வெளுத்துப் போய் நிற்கப்போவது தாங்கள்தான் என்பது நினைவில் இருக்கட்டும் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 6, 2026: தமிழக அரசியலில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக எழுந்துள்ள குதிரை பேரப் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மத்திய தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவிடம், ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ரூ.30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயரும், அதிமுக நிர்வாகியுமான பி.எம்.மன்னனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், அவரது கைது நடவடிக்கைக்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா, தன்னிடம் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்துடன் பல கோடி ரூபாய் கொடுத்து பேரம் பேசப்பட்டதாகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இதுதொடர்பான சில ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து, மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்பட்ட முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனிடம் விசாரணை நடத்தி, பின்னர் அவரைக் கைது செய்துள்ளனர்.
தில்லுமுல்லு செய்த தவெக – எடப்பாடி பழனிசாமி
இதற்கிடையே, பி.எம்.மன்னன் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை முன்னாள் துணை மேயருமான திரு. P.M. மன்னன் அவர்களை பொய் வழக்கில் கைது செய்துள்ள தவெக அரசின் ஏவல்துறைக்கு எனது கடும் கண்டனம்.
மேலும் படிக்க: புதிய திரைப்படங்களுக்கு 6 மணி காட்சிகளுக்கு அனுமதியா?.. பொதுமக்களின் பாதுகாப்பை பணையம் வைப்பதா?.. தமிழக அரசுக்கு திமுக கடும் கண்டனம்!
குதிரை பேரம் நடத்தி, எங்கள் கூட்டணியில் உள்ள அமமுக சட்டமன்ற உறுப்பினரை கடத்தி கையெழுத்து வாங்கி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அத்தனை தில்லுமுல்லு வேலைகளையும் செய்த கட்சி தான் தவெக.
“தலைமைச் செயலகமா? பனையூரின் கிளை அலுவலகமா?”
ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வலைவீசி, “தலைமைச் செயலகமா? பனையூரின் கிளை அலுவலகமா?” என்று மக்களே அருவருக்கும் வகையில், “கீழ்மாடியில் ராஜினாமா; மேல்மாடியில் இணைப்பு விழா” என்று நாடு காணாத கேவலத்தை அரங்கேறிய ஒரே கட்சி தவெக தான்.
இந்த உண்மைகள் குறித்தெல்லாம் பேச வக்கில்லாத இந்த அரசு, மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா மூலம் ஒரு கட்டுக்கதையை புனைந்து, கழக நிர்வாகி திரு. மன்னன் அவர்களை கைது செய்து புதிய நாடகத்தை நடத்துவது வெட்கக்கேடானது.
மேலும் படிக்க: தனுஷின் ‘ஓம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா.. ‘எங்கள் இயக்கத்தின் முதல்வரே’ என்ற அரசியல் வாசகத்தால் பரபரப்பு..
முதல்வரை அணுக முடியாமல், பல Powercenter-களுக்கு நடுவே சிக்கிக்கொண்டு, தவெக ஆட்சி மீது ஆளுங்கட்சி MLA-க்கள் பலரே அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. சொந்த கட்சி MLA-க்களை சமாதானப் படுத்த வழி தெரியாமல், இப்படி ஒரு கதையை இந்த அரசு புனைந்து இருக்கிறதோ? என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
பழைய தமிழ் சினிமா பார்முலா
பாதிக்கப்பட்டவன் மீதே பழியை சுமத்தி குற்றவாளி பட்டம் கட்டும் பழைய தமிழ் சினிமா பார்முலா-வை அஇஅதிமுக மீது திணிக்கப் பார்க்கும் இந்த சினிமா ரீல்ஸ் அரசுக்கு, அதே கதையின் இறுதியில் எல்லா சாயமும் வெளுத்துப் போய் நிற்கப்போவது தாங்கள்தான் என்பது நினைவில் இருக்கட்டும்! உடனடியாக திரு. மன்னன் அவர்களை விடுதலை செய்யவேண்டும் எனவும், இதுபோன்ற தரம்தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.