NTK Seeman: பொதுக்கூட்டத்தில் சலசலப்பு.. ஆவேசமாக அடிக்க பாய்ந்த சீமான்!
செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கியதில், கோட்டையை மராட்டியர்கள் கட்டியதாக குறிப்பிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது. சீமான் தலைமையிலான இந்த கூட்டத்தில், அவர் கோபப்பட்டு மேடையில் இருந்து இறங்கி வந்து வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீமான்
விழுப்புரம், ஆகஸ்ட் 18: விழுப்புரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (Naam Tamilar Katchi) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) கோபப்பட்டு மேடையில் இருந்து இறங்கி சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வரலாற்று சிறப்புமிக்க கோட்டை ஒன்று உள்ளது. செஞ்சி கோட்டை என அழைக்கப்படும் இந்த இடத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் மக்கள் வந்து செல்கின்றனர். இப்படியான நிலையில் சமீபத்தில் செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தது.
வெளியான சர்ச்சை அறிவிப்பு
இந்த அறிவிப்பு செஞ்சி மக்களை மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்ததால் இனிமேல் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் வருகை தருவார்கள். இதனால் பொருளாதார சூழல் மாறும் என மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் யுனெஸ்கோ அங்கீகாரம் தொடர்பான அறிவிப்பில் செஞ்சி கோட்டை மராட்டியர்களால் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட சில அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
Also Read: Seeman Speech : வாக்குறுதிகளை மக்கள் மறக்க மாட்டாங்க – சீமான் பேச்சு
பல்வேறு தரப்பினரும் செஞ்சி கோட்டை மராட்டியர்களுக்கு சொந்தமானது இல்லை என்றும், அது தமிழர்களின் பாரம்பரியமான கோட்டை எனவும், அதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம்
இப்படியான நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் செஞ்சியில், அந்த கோட்டை தமிழ் மன்னர் கோனேரிக்கோன் கட்டியது என்றும், வரலாற்று திரிபை ஏற்படுத்துவதை தடுத்து, தமிழ் மன்னர் கட்டிய கோட்டை என அறிவிக்க வேண்டும் என கோரி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேச முற்பட்டார். அப்போது மேடையின் கீழே சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அதாவது சீமான் பேசுவதை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை அங்கு பவுன்சர்களாக இருந்த பாதுகாவலர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக சீமான் பேச ஆரம்பிக்கையில் குறுக்கீடு நிகழ்ந்ததால் ஆவேசமான அவர் மேடையை விட்டு கீழே இறங்கி சென்று அங்கிருந்தவர்களை கண்டித்தார்.
Also Read: Seeman : திமுக அவ்வளவு பெரிய எதிரி அல்ல.. மதுரையில் சீமான் பேச்சு!
அங்கு சலசலப்பு செய்தவர்களை சீமான் தாக்குவது போல பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீமானை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சமாதானப்படுத்தி மேடைக்கு அழைத்து வந்தனர். இதனால் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அதிர்ச்சியடைந்தனர்.