100 நாள் வேலையின்போது கிடைத்த மர்மப் பொருள்: பீரங்கி குண்டா? – மக்கள் அதிர்ச்சி
Bomb Scare Alert: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே 100 வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாளர்கள் நீர்நிலையை துாய்மைப்படுத்தும் போது இரும்பால் ஆன மர்மப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பீரங்கி குண்டாக இருக்கலாம் என தகவல் பரவ அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
ராணிப்பேட்டை, ஜனவரி 21 : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் (Arakonam) அருகே மேல்பாக்கம் பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடைபெற்று வந்த பணியின் போது, மண்ணுக்குள் புதைந்திருந்த மர்மமான ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அது பீரங்கி குண்டைப் போன்ற தோற்றத்தில் இருப்பதால், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. மேல்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு நீர்நிலையைத் தூய்மைப்படுத்தும் பணியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், ஜனவரி 21, 2026 அன்று தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மண்ணை வெட்டியபோது, இரும்பால் செய்யப்பட்டதாக தோன்றும் ஒரு மர்மப் பொருள் கிடைத்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக தங்களது மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
வெடி குண்டாக இருக்கலாம் என சந்தேகம்
பொருளை நேரில் பார்வையிட்ட மேற்பார்வையாளர், அருகில் ரயில்வே நிலம் இருப்பதால், இது ரயில்வே நிர்வாகத்துக்குச் சொந்தமான ஏதாவது பழைய பொருளாக இருக்கலாம் எனக் கூறி, பணியைத் தொடர அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த மர்மப் பொருளிலிருந்து சிறிய இரும்பு உருண்டைகள் வெளிப்படத் தொடங்கியதைப் பார்த்த தொழிலாளர்கள் கடும் அச்சமடைந்தனர். உடனடியாக பணியை நிறுத்தி, சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையும் படிக்க : பிரதமர் மோடி வருகை: எஸ்பிஜி பாதுகாப்பு வளையத்தில் சென்னை விமான நிலையம்-மதுராந்தகம்!




தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட ஆய்வில், அந்தப் பொருள் பழங்காலத்தில் போர்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர். அது உண்மையில் வெடிக்கும் தன்மை கொண்டதாக இருந்தால், பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அந்த முழுப் பகுதியும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மேலும், ராணுவ அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் வெடிகுண்டு நிபுணர்கள் விரைவில் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அந்த மர்மப் பொருளை ஆய்வு செய்து அதனை அப்புறப்படுத்துவார்கள் என தெரிவித்தனர்.
இதையும் படிக்க : கரூரில் சோக சம்பவம்…பைக் மீது மோதிய பேருந்து..ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “100 நாள் வேலை திட்டப் பணியின் போது மர்மப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும், உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தோம். முதற்கட்ட விசாரணையில், இது போர் நடைபெற்ற காலக்கட்டங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய பீரங்கி குண்டாக இருக்கலாம் எனத் தெரிகிறது. பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிக்கு அருகே செல்ல வேண்டாம். ராணுவத்தின் வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு செய்த பிறகு, முழுமையான பாதுகாப்புடன் அந்தப் பொருள் அகற்றப்படும். எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்” என்றனர்.
இந்த சம்பவம் மெல்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, அடுத்த அறிவிப்பு வரும் வரை அந்தப் பகுதியை மக்கள் தவிர்க்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.