பொது மக்களே கவனம்…புதுச்சேரியில் இந்த 3 மாத்திரைகளுக்கு தடை…மருந்து கட்டுப்பாட்டு துறை எச்சரிக்கை!
Tablets Banned: புதுச்சேரி மாநிலத்தில் 3 மாத்திரைகளுக்கு அம்மாநில மருத்து கட்டுப்பாட்டு துறை தடை விதித்துள்ளது. இது தொடர்பாக மொத்த, சில்லரை மருந்து விற்பனை கடைகளுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட மாத்திரையை விற்பனை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 இடங்களில் உரிய அனுமதியின்றி போலியான மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த தொழிற்சாலைகளை போலீசார் மூடி “சீல்” வைத்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, அந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான மருந்துகள் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த மருந்துகளை மருந்தகங்கள் விற்பனை செய்ய வேண்டாம் எனவும், நோயாளிகள் அந்த மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் எனவும் புதுச்சேரி சுகாதார துறை சார்பில் அனைத்து மாநில சுகாதாரத் துறைகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. இதே போல, தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த மருந்து தொழிற்சாலையில் தயார் செய்த இருமல் மருந்தை அருந்திய 20- க்கும் மேற்பட்ட குழந்தைகள் மத்திய பிரதேசத்தில் பரிதாபமாக உயிரிழந்தன.
புதுச்சேரியில் 3 மாத்திரைகளை விற்பனை செய்ய தடை
இந்த நிலையில், புதுச்சேரியில் 3 மாத்திரைகளை விற்பனை செய்ய மருந்து கட்டுப்பாட்டு துறை தடை விதித்துள்ளது. அதன்படி, கேரளா மற்றும் அகமதாபாத் பாவியா மாவட்டத்தில் இருந்து அபான்பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் பெபாவிட் என்ற பெயரிலான பாராசிட்டமல் 650 மி.லி. கிராம் மாத்திரைகள், இமாச்சலப் பிரதேசம், சிர்மூர் பகுதியில் இருந்து நோனிஸ் பார்மாசூட்டிக்கல் நிறுவனம் தயார் செய்த குடல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும் மாக்பான்சோ 40 மாத்திரை ஆகியவை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: யூடியூப் வீடியோவால் வந்த வினை…உடல் எடையை குறைப்பதற்காக நாட்டு மருந்து சாப்பிட்ட மாணவி…அடுத்து நடந்த விபரீதம்!




சங்காவதி 5 கிராம் மாத்திரைக்கும் தடை
இதே போல, ராஜஸ்தான் மாநிலம் பைவாதி பகுதியில் உள்ள கார்னானி பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான சங்காவதி 5 கிராம் ஆகிய மாத்திரையும் புதுச்சேரியில் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மருந்தகங்களில், இந்த 3 மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது. மேலும், இந்த 3 மாத்திரைகள் எந்த அளவுக்கு இருப்பு உள்ளது என்ற விவரத்தை மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
மாத்திரைகளை திருப்பி அனுப்ப வேண்டும்
அதன் அடிப்படையில், இருப்பு உள்ள அந்த 3 மாத்திரைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இதற்கான உத்தரவுகள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மொத்த மருந்து விற்பனை நிலையங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மருந்து கட்டுப்பாட்டு துறையின் அதிகாரி அனந்த கிருஷ்ணன் கூறியுள்ளார். ஏற்கெனவே, புதுச்சேரியில் மருந்து டானிக் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 3 மாத்திரைகளுக்கு தடை விதித்துள்ளது நோயாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: மதுரை எல்ஐசி அலுவலக தீ விபத்து சம்பவம்…மேலாளர் உயிரிழப்பில் திடீர் திருப்பம்…உதவி மேலாளரின் கொடூர செயல்!