தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர்…சிறிது நேரத்தில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி..முதல்வர் அறிவித்த தீர்மானம்!
Tamil Nadu Legislative Assembly session: தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஆளுநர் ஆர். என். ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறி உள்ளார். இதனால், சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளிலும் ஆளுநர் ஆர். என். ரவி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 2026- ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப் பேரவை கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ( ஜனவரி 20) தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சட்டப் பேரவை வளாகத்துக்கு காலை 9: 20 மணி அளவில் காரில் வருகை தந்தார். அவருக்கு காவல் துறை சார்பில் சிறப்பான வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை, ஏற்றுக் கொண்ட ஆளுநர் ஆர். என். ரவி சட்டப் பேரவைக்குள் வருகை தந்தார். அவருக்கு சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்று சட்டமன்றத்துக்குள் அழைத்து சென்றார். அங்கு, சபாநாயகர் இருக்கையில் ஆளுநர் ஆர். என். ரவி அமர்ந்தார். இதைத் தொடர்ந்து, தமிழ்த் தாய் வாழ்த்துடன் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது, தேசிய கீதத்தை இசைத்து கூட்டத் தொடரை தொடங்க வேண்டும் என்று ஆளுநர் ஆர். என். ரவி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அனுமதி அளிக்காத நிலையில், ஆளுநர் ரவி கவர்னர் உரையை வாசிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து திடீரென வெளியேறினார். பின்னர், தனது காரில் சட்டமன்ற வளாகத்தில் இருந்த புறப்பட்டு சென்றார்.
ஆளுநருக்கு அதிகாரம் இல்லை
இதைத் தொடர்ந்து, முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆற்றிய உரையில், தமிழக அரசு சார்பில் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்ட கவர்னர் உரையில், தனது சொந்த கருத்தை தெரிவிப்பதற்கோ, அதில் உள்ள வார்த்தைகளை நீக்குவதற்கோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. இந்த நிலையில், அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் ஆளுநர் ஆர். என். ரவி இந்த செயலை செய்துள்ளார். ஆளுநரின் இந்த செயலானது நூற்றாண்டு கால மரபையும், பாரம்பரியத்தையும் கொண்ட இந்த மக்கள் சபையை அவமதிக்கும் வகையில் உள்ளது. இதே போல, கடந்த 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து ஆளுநர் ரவி பாதியில் வெளியேறியிருந்தார்.
மேலும் படிக்க: பொதுமக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு…சென்னையில் 2 நாள்கள் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்!




மக்கள் நலன்-மாநில நலனில் அக்கறை…
அண்ணா மற்றும் கருணாநிதி கொள்கையின் அடிப்படையில் தான் ஆளுநர் உரையை நிகழ்த்த வேண்டும் என்று ஆணையிட்டேன். ஆனால், ஆளுநர் ஏற்கெனவே நடந்து கொண்டது போல, மீண்டும் அவ்வாறு செயல்பட்டுள்ளார். ஆளுநர் என்பவர் மக்கள் நலன் மற்றும் மாநில நலனில் அக்கறை கொண்டவராகவும் உண்மையை பேசுபவராகவும் இருத்தல் வேண்டும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, முதல்வர் மு. க. ஸ்டாலின் சில தீர்மானங்களை முன் மொழிந்தார்.
முதல்வர் முன்மொழிந்த தீர்மானங்கள்
அதில், ஏற்கனவே உள்ள ஆளுநர் உரையை ஆளுநர் படிக்காமல் சென்றது ஏற்புடையது அல்ல. ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட உரை இந்த சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநரால் படிக்கப்பட்டதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மேலும், மரபு வழி நிகழ்வுகள் சபாநாயகர் படிக்கப்பட உள்ள ஆளுநர் உரையின் தமிழாக்கம், நான் முன்மொழிகின்ற தீர்மானம் ஆகியவை மட்டும் பேரவை நடவடிக்கை குறிப்பில் இடம் பெறலாம் என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். இந்த தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக நிறைவேற்றி தர வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: “எங்களை மன்னித்து விடுங்கள் ஐயா”…தமிழக டிஜிபிக்கு 1500 போலீசார் கடிதம்…என்ன காரணம்!