தமிழகத்தில் இருந்து விலகிய வடகிழக்கு பருவமழை.. இனி வறண்ட வானிலை தான் – வானிலை நிலவரம் என்ன?
Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், பகல் நேர வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்
வானிலை நிலவரம், ஜனவரி 20, 2026: வடகிழக்கு பருவமழை என்பது தமிழகத்திலிருந்து டிசம்பர் 19, 2026 அன்று விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை என்பது அக்டோபர் 16, 2025 அன்று தமிழகத்தில் தொடங்கியது. வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்தின் அனேக பகுதிகளில் நல்ல மழைப்பதிவு இருந்தது. குறிப்பாக, வங்கக்கடலில் உருவான இரண்டு புயல்களின் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தில் அதிகப்படியான மழை பதிவானது. குறிப்பாக, சென்னையில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இயல்பை விட அதிகபட்ச மழைப் பதிவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சென்னையில் இயல்பை விட 6 சதவீதம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மழையின் அளவு அதிகமாகவும் குறைவாகவும் பதிவாகியுள்ளது. இந்த சூழலில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜனவரி மாதத்திலும் சற்று தீவிரமடைந்து, டெல்டா மாவட்டங்களில் நல்ல மழைப் பதிவு இருந்தது.
மேலும் படிக்க: பலூனுக்கு காற்று நிரப்பும் ஹீலியம் சிலிண்டர் வெடித்து விபத்து – 3 பேர் பரிதாபமாக பலி – 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
விலகிய வடகிழக்கு பருவமழை:
வடகிழக்கு பருவமழை தமிழகத்திலிருந்து விலகிய சூழலில், வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2026 ஜனவரி 20 முதல் 22 வரை வறண்ட வானிலை இருக்கக்கூடும் என்றும், 23 முதல் 25ஆம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அதிகாலையில் பணிமூட்டம் காணப்பட்டு வந்த சூழலில், ஜனவரி 20ஆம் தேதியான இன்று நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அதிகாலை வேளையில் உறைபனி காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், பகல் நேர வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 33.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல, வேலூரில் 31.9, திருத்தணியில் 31.2, சேலத்தில் 31.3, நாமக்கல்லில் 31.8, மதுரையில் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 30.1 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 29.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.