Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கு மனைவி அந்தஸ்து – நீதிமன்றம் பரபரப்பு கருத்து

Live-In Relationship : லிவ்-இன் தொடர்பான வழக்கு ஒன்றில் லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கு மனைவி அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் அது அவர்களை பாதுகாக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கு மனைவி அந்தஸ்து – நீதிமன்றம் பரபரப்பு கருத்து
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 19 Jan 2026 18:44 PM IST

மதுரை, ஜனவரி 19 : சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, லிவ்-இன் உறவுகள் தொடர்பாக மிக முக்கியமான கருத்த வெளியிட்டுள்ளது. லிவ்-இன் உறவுகளில் இருக்கும் பெண்களுக்கு மனைவி என்ற அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும், அதன்மூலம் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மாற்றம் அடைந்து வரும் நவீன சமூக சூழலில், லிவ்-இன் உறவுகள் அதிகரித்து வருவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. ஆனால், இத்தகைய உறவுகள் சில நேரங்களில் பெண்களை பாலியல் மற்றும் பொருளாதார ரீதியாக சுரண்டுவதற்கான கருவியாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், பெண்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லாதது, அவர்களை கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது என நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிமன்றம் , “இந்திய சமூகத்திற்கு லிவ்-இன் உறவுகள் ஒரு கலாசார அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், அவை இன்று எல்லா இடங்களிலும் நடைபெற்று வருகின்றன. நவீன பெண்கள் தங்களது விருப்பப்படி இந்த உறவுகளை தேர்வு செய்கிறார்கள். ஆனால், அதில் திருமண பாதுகாப்பு இல்லை என்பது தெரியவரும்போது, அந்த உண்மை அவர்களை தீயைப் போல சுடுகிறது என குறிப்பிட்டார்.

இதையும் படிக்க : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை கால அவகாசம் நீடிப்பு.. தேர்தல் ஆணையம்..

லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கு மனைவி அந்தஸ்து

மேலும், “பண்டைய இந்தியாவில் காதல் திருமணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைப் போல, இன்றைய சூழலில் லிவ்-இன் உறவுகளையும் காதல் திருமணத்தின் ஒரு வகையாக அங்கீகரித்து, அந்த உறவுகளில் உள்ள பெண்களுக்கு மனைவி என்ற அந்தஸ்தை வழங்கினால், அவர்களது உரிமை பாதுகாக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதன் மூலம், உறவில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அந்தப் பெண்களுக்கு சட்டப்படி மனைவிக்குரிய உரிமைகள் கிடைக்கும் என்ற கருத்தையும் நீதிபதி விளக்கினார்.

இது தொடர்பாக திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் உறவுக்கு பின்னர் விலகியதாக கூறப்படும் ஒரு வழக்கில், முன்ஜாமீன் கோரிய மனுவை விசாரிக்கும் போது நீதிமன்றம் இத்தகைய கருத்தை தெரிவித்தார். வழக்கின் பின்னணி குறித்து கூறிய நீதிமன்றம், மனுதாரர் பெண்ணை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து உறவு வைத்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பு காரணமாக இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருச்சியில் சேர்ந்து வாழ்ந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டபோது, காவல் நிலையத்தில் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் பின்னர் திருமணம் செய்ய மறுத்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதையும் படிக்க : முடிந்தது விடுமுறை.. 20 கி.மீ வரை அணிவகுத்து நின்ற வாகனங்கள்.. ஸ்தம்பித்த சென்னை..

இந்த நிலையில், மனுதாரர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில், பெண் உறவு முறிந்த பிறகே புகார் அளித்ததாகவும், தன்னிடம் வேலை அல்லது வருமானம் இல்லாததால் பெற்றோரின் ஆதரவில் இருப்பதாகவும், திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இதனை பரிசீலித்த நீதிமன்றம், சிறுமிகள், திருமணமான பெண்கள் அல்லது விவாகரத்து பெற்ற பெண்களை போஸ்கோ சட்டம் பாதுகாக்கும் நிலையில், லிவ்-இன் உறவுகளில் உள்ள பெண்களுக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் இல்லாமல் இருப்பது வருத்தமளிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. பாலியல் உறவு ஏற்பட்டுள்ள நிலையில், அந்தப் பெண் மனைவியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் அல்லது திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பின்னர் மறுத்த குற்றத்திற்காக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

வழக்கின் தீவிரத்தையும், ஆதாரங்கள் இருப்பதையும் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு, லிவ்-இன் உறவுகளில் உள்ள பெண்களின் உரிமைகள் குறித்த விவாதத்தில் ஒரு முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.