Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை கால அவகாசம் நீடிப்பு.. தேர்தல் ஆணையம்..

SIR: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் 2025 நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில், 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை கால அவகாசம் நீடிப்பு.. தேர்தல் ஆணையம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 19 Jan 2026 12:12 PM IST

சென்னை, ஜனவரி 19, 2026: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் கால அவகாசம் ஜனவரி 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 18ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் கிட்டத்தட்ட 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6 பூர்த்தி செய்து விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தரப்பில் அதற்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபுறம், தேர்தல் ஆணையம் தரப்பிலும் தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

SIR பணிகள்:

அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் 2025 நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. ஜன. 22ஆம் தேதி கையெழுத்தாகும் பாஜக – அதிமுக கூட்டணி ஒப்பந்தம்..

இந்த வரைவு வாக்காளர் பட்டியலில், 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக, உயிரிழந்தவர்கள், முகவரி மாற்றம் செய்தவர்கள் மற்றும் இரட்டை வாக்குப் பதிவு இருப்பவர்கள் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தமாக 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பம்:

இந்த சூழலில், விடுபட்ட வாக்காளர்கள் மீண்டும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விரும்பினால், படிவம் 6 பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதேபோல், ஆன்லைன் மூலமாகவும் படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. முதலில், இதற்கான காலக்கெடு ஜனவரி 18, 2026 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த நிலவரப்படி, 13 லட்சத்து 3 ஆயிரத்து 487 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஜனவரி 30 வரை விண்ணப்பிக்கலாம்:

இன்னும் பலர் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் ஆணையம் தரப்பில் இந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 30, 2026 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் வாக்காளர்கள் படிவம் 6 பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு, பிப்ரவரி 17, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.