சென்னை ஓமந்தூரார் மருத்துவனையில் கான்கிரீட் இடிந்து விழுந்து விபத்து – தாய், மகள் படுகாயம்
ஓமந்தூரார் மருத்துவமனையின் நுழைவாயிலின் கான்கிரீட் சுவார் இடிந்து விழுந்து தாய் மற்றும் ஏழு வயது சிறுமி படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தாய்க்கு தலையில் தையல் போடப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 18 : ஓமந்தூரார் மருத்துவமனையின் நுழைவாயிலின் கான்கிரீட் சுவார் இடிந்து விழுந்து தாய் மற்றும் ஏழு வயது சிறுமி படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தாய்க்கு தலையில் தையல் போடப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஆபத்தான நிலையில் குழந்தை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவனையில் கான்கிரீட் இடிந்து விழுந்து விபத்து
சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த ஜூன் 15, 2026 அன்று சென்னை அரசினர் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிகிச்சையில் இருக்கும் ராமசாமியை காண்பதற்காக, ஜூன் 17, 2026 இன்று அவரது மனைவி சத்யா தனது 7 வயது இளைய மகள் சிவானியுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று இரவு வந்துள்ளார். அப்போது, கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நுழைவாயிலின் ஒரு பகுதி கான்கிரீட் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சத்யா படுகாயம் அடைந்து சுயநினைவை இழந்துள்ளார். மேலும் சத்யாவின் மகள் சிவானி மீதும் கற்கள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் அவர் இடிபாடுகளுடன் சிக்கினார்.
இந்த நிலையில் படுகாயம் அடைந்த சத்யாவுக்கு தலையில் 7 தையல்கள் மற்றும் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த விபத்தில் சத்யாவின் 7 வயது மகள் சிவானிக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது சிறுமி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவரை பார்க்க வந்த மனைவி மற்றும் மகள் கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் சென்னையின் மிக முக்கியமான மருத்துவமனையில் இத்தகைய விபத்து ஏற்பட்டிருப்பது தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. மக்களின் கடைசி நம்பிக்கையான மருத்துவமனைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.