3 மாவட்டங்களில் புதிதாக மினி டைடல் பூங்காக்கள்… 1800 பேருக்கு வேலைவாய்ப்பு… முழு விவரம் இதோ!
MK Stalin start 3 Mini Tidel Parks: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ரூ.117.65 கோடியில் மினி டைடல் பார்க்குகள் அமைப்பதற்கான பணிகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொலி மூலமாக தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் சுமார் 1,800 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

3 மாவட்டங்களில் புதிதாக மினி டைடல் பூங்காக்கள்
தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புதிய தொழில்களை ஆதரிக்கவும் டைடல் லியோ லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் 2- ஆம் நிலை, 3- ஆம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்களை அமைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தஞ்சாவூர், விழுப்புரம், திருப்பூர், காரைக்குடி, தூத்துக்குடி, வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதே போல, திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பார்க்குகள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் மினி டைடல் பார்க் அமைப்பதற்காக இன்று முதல்வர் மு. க. ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களில் ரூ.117 கோடியில் டைடல் பார்க்குகள்
இந்த நிலையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் ரூ.39.06 கோடியிலும், விருதுநகர் மாவட்டம், கூரை கூண்டில் ரூ.38.72 கோடியிலும், ஈரோடு மாவட்டம், கங்காபுரத்தில் ரூ.39.87 கோடியிலும் என மொத்தம் ரூ.117.65 கோடியில் 3 மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை வியாழக்கிழமை ( பிப்ரவரி 25 ) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் படிக்க: லீமா ரோஸ் மார்ட்டினுக்கு அடித்தது “லக்”.. ஒரே வாரத்தில் அதிமுகவில் முக்கிய பொறுப்பு.. எடப்பாடி அறிவிப்பு!
3 தளங்களுடன் 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்
இதற்காக 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் மினி டைடல் பார்க்குகள் கட்டப்பட்டு ஐடி, ஐடிஇஎஸ், பி பி ஓ மற்றும் ஸ்டார்ட் அப் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம் பெறும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் அந்தந்த மாவட்டங்களில் வசித்து வரும் படித்த இளைஞர்கள் குறிப்பாக பெண்களுக்கு சொந்த மாவட்டத்திலேயே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படுவதுடன், அந்தந்த பகுதிகளின் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதுடன், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1,800 தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு வேலைவாய்ப்பு
இந்த மினி டைடல் பார்க்குகள் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், இதில் சுமார் 1,800 தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இன்றி, கரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பார்க்குகள் அமைப்பதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட்டு, இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: அதிமுக நாட்டு மக்களுக்கான கட்சி… திமுக வீட்டு மக்களுக்கான கட்சி.. எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!