கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!

சேலம் ஏற்காடு மோட்டுகாட்டில் சிவக்குமார் என்பவர் கள்ளக்காதல் விவகாரத்தில் அடித்துக் கொல்லப்பட்டார். மனைவி ராமாயிக்கும், காதலன் சந்தோஷ்க்கும் உள்ள திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட பிரச்சனையே கொலைக்கு காரணம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!

சிவகுமார், ராமாயி, சந்தோஷ்

Updated On: 

30 Sep 2025 06:45 AM

 IST

சேலம், செப்டம்பர் 30: சேலம் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக உயிரிழந்த நபரின் மனைவி, காதலன் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. அங்குள்ள ஏற்காடு மோட்டுகாடு என்ற கிராமத்தில் 36 வயதான சிவக்குமார் என்பவர் தனது மனைவி இராமாயி உடன் வசித்து வந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சிவக்குமார் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையில்  வீட்டிற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக சேலத்திற்கு செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

விபத்தில் இறந்ததாக தகவல்

அந்த வகையில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சேலம் சென்ற அவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பி கொண்டிருப்பதாக மனைவி ராமாயிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சிவக்குமார் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர் செல்போனில் தொடர்பு கொண்டும், பல்வேறு இடங்களிலும் தேடினர்.

இதற்கிடையில் இரவு 10 மணியளவில் அடர்ந்த வனப்பகுதியான வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சிவக்குமார் பைக்குடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிவக்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த குழந்தை.. கழுத்தை நெறித்து கொலை செய்த தாய்!

கொலை என காட்டிக்கொடுத்த பைக்

இதனைத் தொடர்ந்து இதுகுறித்து ஏற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் சிவக்குமார் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு வந்த உறவினர்கள் சிவகுமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட போலீசார் சிவக்குமார் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை செய்தனர்.

மேலும் விபத்து நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் உடைந்த ஹெல்மெட் ஒன்றும் சிறிது தூரத்தில் இரும்பு பைப் ஒன்றையும் போலீசார் கண்டறிந்தனர். இந்த சம்பவத்தில் சிவகுமார் ஓட்டி வந்த பைக்கில் சிறு கீரல் கூட இல்லாதது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் உறவினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாரின் சந்தேக பார்வை மனைவி ராமாயி மீது திரும்பியது.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு.. வாயில் வெடி வைத்து இளம்பெண் கொலை!

கள்ளக்காதலுக்கு இடையூறால் கொலை

அவரிடம் நடந்த கிடக்குப்பிடி விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது. அதன்படி ராமாயிக்கும் ஏற்காடு மருதயங்காடு கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துள்ளது. இந்த தம்பதியினர் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில் சிவக்குமார் இதனை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்குள் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

சில நாட்கள் அமைதியாக இருந்த ராமாயி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் சந்தோஷூடனான உறவை தொடர்ந்துள்ளார். அந்த வகையில் இவர்களது வீட்டிற்கு சந்தோஷ் வந்த நிலையில் அவரை சிவக்குமார் கையும் களவுமாக பிடித்து கம்பத்தில் கட்டி வைத்துள்ளார். பின்னர் ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தங்களது உறவுக்கு பிரச்சினையாக இருப்பதால் சிவகுமாரை கொலை செய்ய  ராமாயி மற்றும் சந்தோஷ் ஆகிய திட்டம் திட்டியுள்ளனர். தொடர்ந்து குப்பனூர் சந்தைக்கு சென்று திரும்பிய சிவகுமாரை சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் அண்ணாமலை தினேஷ் ஆகியோர் பின்தொடர்ந்து வந்து ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலுள்ள மலைப்பாதையில் வழிமறித்து இரும்பு ராடால் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சந்தோஷ், ராமாயி, அண்ணாமலை ஆகியோரை ஏற்காடு போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் தினேஷை தேடி வருகின்றனர்.