திருமணத்தை மீறிய உறவு.. வாயில் வெடி வைத்து இளம்பெண் கொலை!
Karnataka: மைசூர் மாவட்டத்தில், காதலனால் வெடி வைத்து கொல்லப்பட்ட 20 வயது இளம்பெண் ரக்ஷிதாவின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவருக்குத் தெரியாமல் காதலன் சித்தராஜுவை சந்தித்த ரக்ஷிதா, இருவருக்குமிடையேயான வாக்குவாதத்தின்போது வெடி வைத்து கொல்லப்பட்டார். தற்போது சித்தராஜு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகா, ஆகஸ்ட் 26: கர்நாடகா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் அவரது காதலனால் வாயில் வெடி வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் மைசூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் 2025, ஆகஸ்ட் 25ம் தேதி திங்கள்கிழமை நடைபெற்றுள்ளது. அங்குள்ள ஹுன்சூர் தாலுகாவில் இருக்கும் கெராசனஹள்ளி பகுதியில் ரக்ஷிதா என்ற 20 வயது இளம்பெண் வசித்து வந்தார். இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. ஆனால் ரக்ஷிதா தனது உறவுக்கார நபரான பெரியபட்னா தாலுகாவில் உள்ள பெட்டடபுரா கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜுவுடன் திருமணத்தை மீறிய தொடர்பில் இருந்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நேரம் செலவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த வழக்கம்போல கணவருக்கு தெரியாமல் ரக்ஷிதா சித்தராஜூவை சந்திக்க வந்துள்ளார். இவர்கள் இருவரும் சாலிகிராமா தாலுகாவில் உள்ள பெர்யா கிராமத்தில் இருக்கும் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தனிமையில் நேரம் செலவிட்டு வந்துள்ளனர்.
வாக்குவாதம் – கொலை
அப்போது ஆரம்பத்தில் நன்றாக பேசிக்கொண்டிருந்த இருவருக்குள்ளும் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட தொடங்கியது. இதனால் ஆத்திரமடைந்த சித்த ராஜூ கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத ஒரு செயலை செய்தார். அதன்படி அவர் தான் கொண்டு வந்த வெடிமருந்தை வலுக்கட்டாயமாக ரக்ஷிதா வாயில் திணித்து தீ வைத்துள்ளார். அதில் வெடிமருந்து வெடித்து ரக்ஷிதா முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கிடையில் லாட்ஜில் திடீரென வெடிச்சத்தம் கேட்டதால் அங்கிருந்த ஊழியர்கள் சத்தம் வந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது சித்தராஜூ தனது மனைவி செல்போன் பேசிக்கொண்டிருக்கையில் அது வெடித்து சிதறி விட்டதாக கூறியுள்ளார். இதனால் தனது மனைவி ரக்ஷிதா இறந்து விட்டதாகவும் அழுதுக்கொண்டே கூறியுள்ளார்.
Also Read: கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மாமியார்.. ராகி உருண்டையில் விஷம் கலந்து கொலை செய்த மருமகள்!
தப்பிக்க நினைத்த சித்த ராஜூ
இதனையடுத்து அதனை உண்மை என நம்பிய லாட்ஜ் ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் வந்தால் தான் மாட்டிக்கொள்வோம் என நினைத்த சித்த ராஜூ அங்கிருந்து ஏதேதோ காரணங்களை சொல்லி தப்பிக்க முயன்றார்.
Also Read: ரூ.30,000-க்கு பெண் சிசுக் கொலை… சிக்கிய மருத்துவர்.. திருப்பத்தூரை அதிர வைத்த சம்பவம்!
அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே லாட்ஜ் ஊழியர்கள் சித்த ராஜூவை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதில் தான் ரக்ஷிதாவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சாலிகிராம போலீசார் சித்த ராஜூவை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருமணத்தை மீறிய உறவால் நடந்த சம்பவம் ஒரு பெண்ணின் உயிரை பறித்தது மட்டுமல்லாமல் ஒரு இளைஞனின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக நெட்டிசன்கள் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.