பாலமேடு ஜல்லிகட்டு போட்டி.. தயாராக இருக்கும் வீரர்கள், காளைகள்.. போட்டி நேரத்தில் திடீர் மாற்றம்..
Palamedu Jallikattu 2026: உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அந்தவகையில், நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில், இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. நேற்று சரியான நேரத்திற்கு திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்று போட்டி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மதுரை, ஜனவரி 16: பொங்கல் பண்டிகையை ஒட்டி, மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சற்று நேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பாலமேடு ஜல்லிகட்டிற்காக 1000க்கும் மேற்பட்ட காளைகளுக்கும், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த காளை உரிமையாளருக்கு முதல் பரிசாக ஒரு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும் வழங்கப்படுகிறது. 2வது பரிசுபெறும் காளை உரிமையாளருக்கு கன்று குட்டியுடன், நாட்டு பசுமாடும், இரண்டாம் வீரருக்கு பைக்கும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
இதையும் படிக்க : தித்திக்கும் தைப்பொங்கல்.. தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டம்!!
போட்டி நேரம் திடீர் மாற்றம்:
இதனிடையே, பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு தொடங்கும் என ஜல்லிக்கட்டு குழுவினர் மற்றும் அரசு தரப்பு அறிவித்திருந்தனர். ஆனால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்னமும் பாலமேட்டுக்கு வராத நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், போட்டி நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும், காலை 9 மணிக்கு போட்டி தொடங்கும் எனவும் அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:
பாலமேட்டில் உள்ள மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் தயார் நிலையில் வாடிவாசல், பார்வையாளர் மாடம், மற்றும் இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 4000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை ஜல்லிக்கட்டு போட்டியில் ஒவ்வொரு வீரரும் எடுக்கும் புள்ளியை கணக்கிட ஸ்கோர் போர்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்இடி திரையில் வீரர்கள் அடக்கிய காளைகளின் விவரம் திரையிடப்படும்.