AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நள்ளிரவில் போதையில் தள்ளாடிய அரசு பேருந்து ஓட்டுநர்; 55 பயணிகளின் உயிருடன் விளையாடிய பகீர் சம்பவம்

55 பயணிகளின் உயிரை பணயம் வைத்து, மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கியதாகக் கூறப்படும் ஓட்டுநர் மீது போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறை உடனடியாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் போதையில் தள்ளாடிய அரசு பேருந்து ஓட்டுநர்; 55 பயணிகளின் உயிருடன் விளையாடிய பகீர் சம்பவம்
மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்
Sekaran S
Sekaran S | Updated On: 30 Jun 2026 11:09 AM IST

ஜூன் 30, 2026: “55 உயிர் இருக்கு… எங்காவது சாத்துனா என்னாகும்? வண்டியில் குழந்தைகளும், பெண்களும் இருக்காங்க… யார் பதில் சொல்லப் போறது?” என, நள்ளிரவில் அரசு பேருந்து ஓட்டுநரை பயணிகள் சுற்றிவளைத்து கேள்வி எழுப்பும் பதைபதைக்க வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு கோவை நோக்கி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான TN 57 N 2980 என்ற எண் கொண்ட பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 55-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்திருந்தனர்.

அதிவேகமாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர்:

பேருந்து புறப்பட்ட சில கிலோமீட்டர்களிலேயே, ஓட்டுநர் பேருந்தை தாறுமாறாகவும், அதிக வேகத்திலும் இயக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் கடும் அச்சமடைந்து, எந்த நேரத்திலும் விபத்து ஏற்படலாம் என்ற பயத்தில் தவித்தனர்.

பேருந்து திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் வந்தபோது, மேலும் பயணிக்க முடியாது என முடிவு செய்த பயணிகள், பேருந்தை உடனடியாக சாலையோரம் நிறுத்துமாறு ஓட்டுநரிடம் வலியுறுத்தினர். இதையடுத்து, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதும், தள்ளாடியபடி கீழே இறங்கி, அருகில் இருந்த ஒரு குடோனுக்குள் சென்று தரையில் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ஜூலை 10, 11-ல் கரூர் பயணம் மேற்கொள்ளும் முதல்வர் விஜய்.. உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க திட்டம்..

குடிபோதையில் தள்ளாடிய ஓட்டுநர்:

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், அவரை எழுப்பி, “நிற்கவே முடியவில்லை… இப்படியிருக்க எப்படி இவ்வளவு தூரம் பேருந்தை ஓட்டி வந்தீர்கள்? 55 உயிர்கள் உங்கள் கையில் இருந்தன. ஏதாவது விபத்து நடந்திருந்தால் யார் பொறுப்பு?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இந்த சம்பவத்தை பயணிகள் தங்களது செல்போன்களில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வேகமாக பரவி, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

55 பயணிகளின் உயிரை பணயம் வைத்து, மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கியதாகக் கூறப்படும் ஓட்டுநர் மீது போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறை உடனடியாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Follow Us