அரசு அதிகாரிகள் மூட நம்பிக்கைகளுக்கு அடிபணியக்கூடாது… சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
Madras High Court: சென்னை எண்ணூர் அருகே கார்த்திக் என்பவர் வீட்டில் தெய்வங்களின் சிலைகளை நிறுவிய பிறகு சிலர் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறி, உள்ளூர் மக்கள் சிலர் காவல் துறையிடம் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஜனவரி 3: அரசு அதிகாரிகள் மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) கடுமையான கருத்தை தெரிவித்துள்ளது. தனிநபர் தனது சொந்த இடத்தில் அமைதியாக வழிபாடு நடத்தினால், அதனை எதிர்த்து பெரும்பான்மை என்ற பெயரில் பொதுமக்கள் சட்டத்தை தங்களது கைகளில் எடுத்துக் கொள்ள முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சென்னை எண்ணூர் அருகே நெட்டுக்குப்பம் பகுதியில் உள்ள பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், தனது வீட்டில் சிவசக்தி, தக்ஷீஸ்வரி, விநாயகர் மற்றும் வீரபத்ர சுவாமி ஆகிய தெய்வங்களின் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வந்தார். இதில் அவரது அண்டை வீட்டாரும் கலந்து கொண்டனர்.
‘பொதுமக்களிடம் நிதி வசூலிக்கக்கூடாது’
இந்த நிலையில், சிலைகளை நிறுவிய பின்னர் அந்த பகுதியில் சிலர் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறி, உள்ளூர் மக்கள் சிலர் காவல் துறையிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கார்த்திக் வீட்டிலிருந்து சிலைகளை பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கையை எதிர்த்து கார்த்திக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2025 ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவில், பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை திருப்பி வழங்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்றும், பொதுமக்களிடமிருந்து நிதி வசூல் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
இதையும் படிக்க : இனி 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே ராமேஸ்வரம் போகலாம் – பொங்கலுக்கு வருது வந்தே பாரத் ரயில் – எந்தெந்த ஸ்டேஷனில் நிற்கும்?
ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்தாமல் அதிகாரிகள் சிலைகளை திருப்பி வழங்கவில்லை எனக் கூறி, கார்த்திக் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து மனுதாரர் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.
அதன்படி, மனுதாரர் சிலைகளை பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிவுக்கு வந்தது. மேலும், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் காவல் துறை நடவடிக்கை எடுக்கலாம் என்றும், அனுமதி இல்லாமல் வீட்டில் கோவில் கட்டப்பட்டிருந்தால் அதற்கேற்ற சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதேபோல், வீட்டில் காணிக்கைப் பெட்டி வைக்கப்பட்டால், அதற்கு எதிராக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். முக்கியமாக, தனிநபர் தனது சொந்த இடத்தில் அமைதியாக வழிபாடு நடத்தினால், அதற்கு எதிராக பெரும்பான்மை என்ற பெயரில் பொதுமக்கள் சட்டத்தை தங்களது கைகளில் எடுத்துக் கொள்ள முடியாது என்றும், அரசு அதிகாரிகள் மூடநம்பிக்கைகளுக்கும் தவறான நம்பிக்கைகளுக்கும் அடிபணியக் கூடாது என்றும் நீதிபதி கடுமையாக அறிவுறுத்தினார்.
இதையும் படிக்க : ஜல்லிக்கட்டு பிரியர்களே தயாரா…மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகள் அறிவிப்பு!
மேலும், கடவுளோ அல்லது சிலைகளோ மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்றும், இவ்வாறு மூடநம்பிக்கைகளை பக்தி எனக் கருத முடியுமா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இத்தகைய நம்பிக்கைகளை அறிவியல் என ஒருபோதும் கருத முடியாது என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு, தனிநபர் வழிபாட்டு உரிமை, சமூக ஒற்றுமை மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றை வலியுறுத்தும் முக்கிய தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.