பல மாதங்களாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம் – கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் நீதிபதி கேள்வி
High Court Questions Police Over Investigation Delay : கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான வழக்கில், மாவட்ட ஆட்சியர் ஜூலை 31, 2026 அன்றே அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்ற பிறகும் பல மாதங்களாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? யாரையும் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டாம் என நீதிபதி தெரிவித்தார்.
சென்னை, நவம்பர் 24 : மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வழக்கு நவம்பர் 24, 2026 இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் (High Court) தமிழக காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜூலை 31, 2026 அன்றே அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்ற பிறகும் பல மாதங்களாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
‘பல மாதங்களாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?’
மேலும் பேசிய நீதிபதி, நடவடிக்கை எடுத்திருந்தால் ஆட்சியர் புகார் அளித்திருக்க மாட்டார் . ஆட்சியருக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . யாரையும் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் காப்பாற்றும் வகையில் அரசு செயல்படாது என நம்புகிறேன் என நீதிபதி தெரிவித்தார். அதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு, அரசு யாரையும் காப்பாற்ற விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க : வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்கள் – வனத்துறையினர் இடையே வாக்குவாதம்.. கார்த்திகை தீபத் திருநாளில் அனுமதி மறுத்ததால் பரபரப்பு!




எம்எல்ஏ வீட்டில் போலீசார் விசாரணை
இதற்கிடையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் வீட்டில் உளுந்தூர்பேட்டை குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் யோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பெண் ஆட்சியர் அளித்த புகாரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளாத தமிழக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் அறிக்கை பெற்றுத்தர உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தான் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷிடம் உளுந்தூர்பேட்டை குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் யோகேஸ்வரன் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது பதிவில், இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது.
இதையும் படிக்க : திருப்பரங்குன்றத்தில் உச்சகட்டப் பாதுகாப்பு.. 5,600-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிப்பு; மாலையில் மகாதீபம்!!
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா? அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா? இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.