உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி… இந்த 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Heavy Rain Alert : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நவம்பர் 22, 2025 அன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறலாம் எனவும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை நவம்பர் 22 : கடந்த 17, 2025 அன்று வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை (Heavy Rain) பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை அறிஞர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தனர். அதன் படி கடந்த சில நாட்களாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நவம்பர் 22, 2025 அன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகிற நவம்பர் 24, 2025 அன்று திங்கள்கிழமை தென்கிழக்கு வங்கக்கடலில் தாழ்வுப் பகுதி ஆகவும், நவம்பர் 26, 2025 அன்று புயலாகவும் (Cyclone) வலுப்பெறக்கூடும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா?
கடந்த இரண்டு நாட்களாக தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வந்தது. அதன் தாக்கமாக நவம்பர் 22, 2025 அன்று காலை 8.30 மணியளவில் அந்த பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தற்போது உருவான தாழ்வுப் பகுதி, வருகிற நவம்பர் 24, 2025 அன்று மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாகவும், பின்னர் நவம்பர் 26, 2025 அன்று புயலாக மாறும் வாய்ப்பும் உள்ளது. இதற்கு கென்யா எனப் பெயரிடப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. வலுப்பெறக்கூடும் என கணிப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும்?




சென்னைக்கு ஆபத்தா?
இந்த புயல் தமிழக வடக்கு கடலோர பகுதிகள் அல்லது ஆந்திர மாநில கடலோர பகுதிகள் வழியாக கரை ஒதுங்கும் வாய்ப்பு இருப்பதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சென்னை நேரடியாக பாதிக்கப்படுமா? என்பது அடுத்த இரண்டு நாட்களில் மட்டுமே தெளிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நவம்பர் 22 முதல் 25 வரை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இன்று 11 மாவட்டங்களில் கனமழை
இதனையடுத்து தமிழகத்தில் நவம்பர், 22, 2025 அன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன் படி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கும். மேலும், நவம்பர், 23, 2025 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதில், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி மற்றும் இதர மாவட்டங்கள் அடங்கும். இதனையடுத்து நவம்பர் 23, 2025 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுரை வழங்கியுள்ளது.